அரசு ஊழியர் கொலையில் 5 பேர் சிக்கினர்

புதுவை அருகே பழிக்குப்பழியாக அரசு ஊழியர் கொலை செய்யப்பட்டதில் 5 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2021-10-15 20:13 GMT
புதுவை அருகே பழிக்குப்பழியாக அரசு ஊழியர் கொலை செய்யப்பட்டதில் 5 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அரசு ஊழியர்
புதுச்சேரி காமராஜர் நகர் கட்டபொம்மன் வீதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 52). கோரிமேடு அருகே உள்ள தமிழக பகுதியான திருநகரில் குடிநீர் தொட்டி ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். 
ஆயுத பூஜையையொட்டி நேற்று முன்தினம் இரவு வேலை செய்யும் தண்ணீர் தொட்டிக்கு பூஜை செய்வதற்காக மணிவண்ணன் வந்தார்.
அப்போது ஒரு கும்பல் அவரை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. இதில் தலை, கழுத்து, முகம் என உடலில் பல இடங்களில் சரமாரியாக வெட்டுக்காயமடைந்த மணிவண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.
கொலையில் தொடர்பு
இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அருண், இன்ஸ்பெக்டர் அன்பரசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து மணிவண்ணன் உடலை கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை  குறித்து ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் ஏற்கனவே நடந்த கொலைக்கு பழிக்குப்பழியாக மணிவண்ணன் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
அதாவது, கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதி புதுவை மேட்டுப்பாளையம் போக்குவரத்து முனையத்தில் நடைபயிற்சி சென்ற கோரிமேடு காமராஜர் நகரை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் மாந்தோப்பு சுந்தர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலையில் மணிவண்ணின் மகன்கள் சுந்தர், வினோத் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருந்து வருகிறார்கள். இவர்களை பழிவாங்க எதிரிகள் நோட்டமிட்டு வந்தனர். இதையறிந்து இருவரும் தலைமறைவாகி விட்டனர். 
மகன்களுக்கு பதில் தந்தை 
இந்தநிலையில் கடந்த மாதம் 30-ந் தேதி மாந்தோப்பு சுந்தரின் நினைவு நாள் வந்தது. இதையொட்டி பழிவாங்க எதிரிகள் காத்திருந்தனர். ஆனால் போலீசாரால் விதித்த தடையால் சுந்தர், வினோத் வெளியூரில் பதுங்கி இருந்தனர். எனவே எச்சரிக்கும் விதமாக அவர்களது தந்தை மணிவண்ணனை தீர்த்துகட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து மாந்தோப்பு சுந்தரின் மனைவி செல்வி, அவரது மகன் ஜோஸ்வா மற்றும் மது, பாஸ்கர், ஆனந்தராஜ் சரவணன், புத்தர், முருகன் ஆகிய 8 பேரை போலீசார் தேடி வந்தனர்.
அவர்களை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் மாந்தோப்பு சுந்தரின் மனைவி செல்வி, அவரது கூட்டாளிகள் 4 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.
கொலை நடந்த இடத்துக்கு நேற்று காலை விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா வந்து விசாரித்து கொலையாளிகளை கைது செய்ய தனிப்படை போலீசாருக்கு ஆலோசனை தெரிவித்தார்.

மேலும் செய்திகள்