பிரதமர் அலுவலக இணைச்செயலாளர் பி.அமுதா, தமிழக அரசு பணிக்கு மாற்றம்

பிரதமர் அலுவலக இணைச்செயலாளர் பி.அமுதா, தமிழக அரசு பணிக்கு மாற்றம் மத்திய அரசு உத்தரவு.

Update: 2021-10-15 20:54 GMT
சென்னை,

பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக பணியாற்றிய தமிழக அரசைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.அமுதா, மீண்டும் தமிழக அரசு பணிக்கு திரும்பினார்.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பி.அமுதா. 1994-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழகத்தின் ஐ.ஏ.எஸ். அதிகாரியானார். தர்மபுரி உள்பட சில மாவட்டங்களில் கலெக்டராக பணியாற்றியுள்ளார்.

சிறந்த நிர்வாக பணிக்காக தமிழக அரசின் பாராட்டை பெற்றிருப்பவர் பி.அமுதா. கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பரில் சென்னையில் பெருவெள்ளம் சூழ்ந்தபோது சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அப்போது மிகச்சிறப்பாக வெள்ள நிவாரணப் பணிகளை ஆற்றினார். நீரோட்ட பாதைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த பல கட்டிடங்களை அப்புறப்படுத்தி அனைவரின் பாராட்டைப் பெற்றார்.

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மறைந்தபோது அவரது உடலை மெரினா கடற்கரையில் புதைப்பதற்கு திறம்பட ஏற்பாடுகளை செய்திருந்தார். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக பயிற்சி நிறுவனத்தில் பொது நிர்வாகத்துறையின் பேராசிரியராக இடமாற்றம் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து 2020-ம் ஆண்டு ஜூலையில் பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக பி.அமுதா நியமிக்கப்பட்டார். மத்திய அரசு பணியில் 3 ஆண்டுகள் நிறைவடையாத நிலையில், மீண்டும் தமிழக அரசு பணிக்கு பி.அமுதா மாற்றப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

மேலும் செய்திகள்