தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-15 23:30 GMT
சென்னை,

வங்ககடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்ககடல் மற்றும் வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடலோர பகுதியில் நிலைக்கொண்டு இருக்கிறது.

இதேபோல், அரபிக்கடலில் உருவான மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளா-லட்சத்தீவு கடலோர பகுதியில் நிலைக்கொண்டுள்ளது. இதன் காரணமாகவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாகவும் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) ஓரிரு இடங்களில் கனமழையும், சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு

அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் இன்று பெய்யக்கூடும்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், மேமாத்தூர் 7 செ.மீ., வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம், காட்டுமயிலூர் தலா 5 செ.மீ., பாலக்கோடு, பையூர், அன்னவாசல், கலையநல்லூர் தலா 4 செ.மீ., கோபிச்செட்டிப்பாளையம், நெடுங்கல், பொன்னமராவதி, செங்கல்பட்டு, திருவாடானை, தாமரைப்பாக்கம், திருப்பத்தூர், மரக்காணம் தலா 3 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்துள்ளது.

மேலும் செய்திகள்