கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டி மலைரெயிலில் பயணம் தாவரவியல் பூங்காவில் மரக்கன்று நட்டார்

கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டி மலைரெயிலில் குடும்பத்தினருடன் பயணம் செய்தார். பின்னர் தாவரவியல் பூங்காவில் மரக்கன்று நட்டு வைத்தார்.

Update: 2021-10-17 21:04 GMT
ஊட்டி,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 5 நாள் சுற்றுப்பயணமாக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கடந்த 15-ந் தேதி வந்தார். அவர் ஊட்டி ராஜ்பவனில் தனது குடும்பத்தினருடன் தங்கி உள்ளார்.

இந்த நிலையில் நேற்று ராஜ்பவனில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி காரில் புறப்பட்டு ஊட்டி ரெயில் நிலையத்துக்கு சென்றார். மதியம் 12.15 மணிக்கு ஊட்டியில் இருந்து குன்னூருக்கு சென்ற மலை ரெயிலில் தனது மனைவி லட்சுமி ரவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் பயணம் செய்தார். மலைரெயிலில் முதல் வகுப்பில் கவர்னர் அமர்ந்து இருந்தார்.

போலீஸ் பாதுகாப்பு

அந்த ரெயிலில் சுற்றுலா பயணிகளும் சென்றனர். தொடர்ந்து கவர்னர் தனது குடும்பத்தினருடன் குன்னூரில் உள்ள தனியார் ஓட்டலில் மதிய உணவு அருந்தினார்.

பின்னர் மாலை 3.20 மணிக்கு குன்னூரில் இருந்து புறப்பட்டு ஊட்டி ராஜ்பவனுக்கு வந்தார். கவர்னர் மலைரெயிலில் பயணம் செய்ததால், ஊட்டி மற்றும் குன்னூர் ரெயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மரக்கன்று நட்டார்

இதையடுத்து ஊட்டி தாவரவியல் பூங்காவில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு விக்கி மரக்கன்றை நட்டு வைத்து தண்ணீர் ஊற்றினார். அவரது மனைவி லட்சுமி ரவி ருத்ராட்சை மரக்கன்றை நட்டு தண்ணீர் ஊற்றினார்.

பூங்காவில் ருத்ராட்சை மரம் மற்றும் பழமையான மரங்கள் பராமரிக்கப்பட்டு வருவது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் கவர்னர் கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்