அ.தி.மு.க.விற்கும் சசிகலாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை - எடப்பாடி பழனிசாமி

தூத்துக்குடி சம்பவத்தில் மக்களை பாதுக்காக்கும் காவலருக்கே இந்த நிலை என்றால் பொதுமக்களுக்கு என்ன நிலை என்பதை பார்க்கவேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2021-10-20 10:31 GMT
சென்னை

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சென்னை கிண்டி ராஜ்பவனில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி  சந்தித்து மனு அளித்தார்.

அப்போது அவர், கவர்னரிடம், ‘9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு, தில்லுமுல்லு நடைபெற்றுள்ளது. தேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக நடந்துள்ளது. அரசு எந்திரம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எந்தவித முறைகேடும் இல்லாமல் ஜனநாயகரீதியில் நேர்மையாக நடைபெற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகள் அடங்கிய 11 பக்க மனுவை வழங்கினார்.அவருடன், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அதன் பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி  அ.தி.மு.க.விற்கும் சசிகலாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் சசிகலா பொதுச்செயலாளர் என கூறிவருவதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம் எனவும் கூறினார்.

எடப்பாடி பழனிசாமி பேட்டியின் போது கூறியதாவது:-

ஊரக உள்ளாட்சி தேர்தல் முறைகேடு குறித்து கவர்னரிடம்  மனு அளித்துள்ளோம்.  திமுக தில்லுமுல்லு செய்து ஜனநாயக படுகொலை செய்து வெற்றி பெற்றவர்களை தோல்வி அடைந்ததாக அறிவித்துள்ளது.

மாவட்ட கலெக்டர்களும்  முறையாக பணி மேற்கொள்ளவில்லை தவறுகள் முறைகேடுகள் நடைப்பெற்றது குறித்து கவர்னரிடம்  முழுமையாக தெரிவித்துள்ளோம்.

தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைப்பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தை அ.தி.மு.க. நாடியது.  இந்த தேர்தல் இந்திய நாட்டிற்கு முன்னுதாரணமாக இருக்கும் தேர்தலாக நடைப்பெற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், ஆளுங்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற யுக்திகளை கையாண்டு வெற்றி பெற செய்துள்ளது.

திருப்பத்தூரில் வாக்குப் பெட்டியை எடுத்து சென்ற எம்.எல்.ஏ மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. 2019ல் தேர்தலை நடத்த அ.தி.மு.க. தயாராக இருந்தது. வார்டு மறுவரை பணிகள் குறித்து நீதிமன்றத்திற்கு சென்றது தி.மு.க. தான்.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து கவர்னரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சர் ஒருவருடைய உதவியாளர் பொதுமக்கள் முன்னிலையிலேயே போலீஸ்காரரின் கன்னத்தில் அறைந்துள்ளார். அந்த போலீஸ்காரர் தனக்கு ஏற்பட்ட சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். ஆனால் அவரை மிரட்டி புகாரை வாபஸ் பெற செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.நடைபெற்ற சம்பவம் உண்மைதான். ஆனால் புகார் கொடுத்தவர் திரும்ப பெற்றுக் கொண்ட காரணத்தால் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று சொல்லி இருக்கிறார். இது தவறு. போலீஸ்காரரை அடித்தவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதுதான் சரியாகும்.

தூத்துக்குடி சம்பவத்தில் மக்களை பாதுக்காக்கும் காவலருக்கே இந்த நிலை என்றால் பொதுமக்களுக்கு என்ன நிலை என்பதை பார்ப்பதோடு, தவறு செய்தவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மீது வேண்டும் என்றே திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கத்தோடு லஞ்ச ஒழிப்புத்துறை ஈடுபட்டு  வருகிறது.  மடியில் கனம் இல்லை வழியில் பயம் இல்லை. 5 மாத கால ஆட்சியில் கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன் மட்டுமே தி.மு.க. செய்து வருகிறது.  ஊரக உள்ளாட்சி தேர்தலில் பணம் கொடுத்து மட்டுமே தி.மு.க. வெற்றி பெற்றது.

அ.தி.மு.க.விற்கும் சசிகலாவிற்கு எந்த தொடர்பும் இல்லை. சசிகலா பொதுச்செயலாளர் என கூறிவருவதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம்.

அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது மீனவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்ததாகவும், மீனவர்களுக்கு அ.தி.மு.க. உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்