நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை - மாநில தேர்தல் ஆணையர் தகவல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.

Update: 2021-10-28 23:41 GMT
சேலம், 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து மண்டலம் வாரியாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 7 மாவட்டங்களில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்த மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்தில், மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் பேசியதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இந்தியாவிலேயே மிக அதிகமாக நகர்ப்புற கட்டமைப்புகளை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டில் ஏறக்குறைய 50 சதவீதம் மக்கள் நகர்ப்புறங்களில் வசிக்கிறார்கள்.

தமிழகத்தில் உள்ள 6.25 கோடி வாக்காளர்களில் 3 கோடி வாக்காளர்களுக்கு ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. மேலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 4 மாதங்களில் நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே, அந்த 4 மாதங்களுக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை மிகச்சிறப்பாக நடத்த வேண்டும்.

வாக்காளர்கள் நியாயமான முறையில் வாக்களிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளதால் மாவட்ட கலெக்டர்கள் தேர்தல் விதிமுறைகள் குறித்து தீவிர பயிற்சிகளை வழங்க வேண்டும்.

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்தப்பட்டது. அதேபோன்று தற்போது நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களிலும் அனைத்து வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

மாவட்ட கலெக்டர்கள் உள்பட அனைத்து அதிகாரிகளும் சிறப்பாக செயல்பட்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சிறப்பான முறையில் நடத்தி முடிக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்