சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை மாவட்டத்தில் 40 லட்சத்து 54 ஆயிரத்து 38 வாக்காளர்கள் உள்ளனர்.

Update: 2021-11-01 19:04 GMT
சென்னை,

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரியும், பெருநகர சென்னை மாநகராட்சியின் கமிஷனருமான ககன்தீப் சிங் பேடி, சென்னை ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நேற்று வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், கூடுதல் மாவட்ட தேர்தல் அதிகாரியும், துணை கமிஷனருமான (வருவாய் மற்றும் நிதி) விஷூ மகாஜன், மாவட்ட வருவாய் அதிகாரி (தேர்தல்) ஜி.குலாம் ஜிலானி பப்பா, தி.மு.க. சார்பில் மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் மருது கணேஷ், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.பி. பாலகங்கா, பா.ஜ.க. சார்பில் மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன், கராத்தே தியாகராஜன், காங்கிரஸ் சார்பில் மாநில துணை தலைவர் தாமோதரன் உள்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் சரிபார்க்க வேண்டும்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் 1.1.2022-ம் தேதியினை தகுதி ஏற்படுத்தும் நாளாகக்கொண்டு 2022-ம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சுருக்க முறை திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும் வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் குறித்த விவரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா? அல்லது இல்லையா? என்பது குறித்து சரிபார்த்து கொள்ளவேண்டும்.

சிறப்பு முகாம்கள்

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் மற்றும் 1.1.2022 அன்று 18 வயது நிறைவு அடைபவர்கள் (1.1.2004-ம் தேதிக்கு முன்பாக பிறந்தவர்கள்) படிவம் 6-ஐ பூர்த்தி செய்தும், பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7-ஐ பூர்த்தி செய்தும், பதிவுகளில் திருத்தம் தொடர்பாக படிவம் 8-ஐ பூர்த்தி செய்தும், சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 8-ஏயினை பூர்த்தி செய்தும், அதற்கான ஆவண ஆதார நகலினை இணைத்தும் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர், பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் வருகிற 30-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதற்காக வருகிற 13, 14, 27 மற்றும் 28.11.2021 (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்) ஆகிய நாட்களில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. பொதுமக்கள் www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும் தங்களுடைய பெயர்கள் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். சென்னை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 750 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதிகபட்சமாக பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் 297 வாக்குச்சாவடிகளும், குறைந்தபட்சமாக எழும்பூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 169 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பெண் வாக்காளர்கள் அதிகம்

இந்த ஆண்டு 19.3.2021 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர்கள் பட்டியலின்படி, ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 94 ஆயிரத்து 505, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 61 ஆயிரத்து 473, மூன்றாம் பாலின வாக்காளர்களின் எண்ணிக்கை 1,083 என மொத்தம் சென்னை மாவட்டத்தின் வாக்காளர்களின் எண்ணிக்கை 40 லட்சத்து 57 ஆயிரத்து 61 ஆகும்.

நடைபெற்று முடிந்த தொடர் திருத்தத்தில் சென்னை மாவட்டத்தில் 19 லட்சத்து 92 ஆயிரத்து 198 ஆண் வாக்காளர்கள், 20 லட்சத்து 60 ஆயிரத்து 767 பெண் வாக்காளர்கள் மற்றும் 1,073 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 40 லட்சத்து 54 ஆயிரத்து 38 வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதில் 10 ஆயிரத்து 621 ஆண் வாக்காளர்கள், 11 ஆயிரத்து 862 பெண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலின வாக்காளர்கள் 9 பேர் என மொத்தம் 22 ஆயிரத்து 492 வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் 12 ஆயிரத்து 928 ஆண் வாக்காளர்கள், 12 ஆயிரத்து 568 பெண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலின வாக்காளர்கள் 19 பேர் என மொத்தம் 25 ஆயிரத்து 515 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

துறைமுகத்தில் குறைவு, வேளச்சேரியில் அதிகம்

வாக்காளர் எண்ணிக்கை குறைந்தபட்சமாக துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 76 ஆயிரத்து 679 வாக்காளர்களும், அதிகபட்சமாக வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் 3 லட்சத்து 15 ஆயிரத்து 502 வாக்காளர்களும் உள்ளனர். ஜனநாயகத்தினை வலுப்படுத்த, தகுதியுள்ள அனைத்து பொதுமக்களும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற ஏதுவாக வரைவு வாக்காளர் பட்டியலினை பார்வையிட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அதிகாரியும், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனருமான ககன்தீப் சிங் பேடி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்