தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் இடங்களில் மெகா மருத்துவ முகாம் தொடக்கம்

மழைக்காலத்தில் நோய் பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் இன்று 5 ஆயிரம் இடங்களில் மெகா மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.

Update: 2021-11-13 05:30 GMT
சென்னை, 

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது. 

இத்தகைய சூழலில் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவாத வகையில் சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக சம்பந்தப்பட்ட இடங்களில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளாக பிளீச்சிங் பவுடர் அடிப்பது, கழிவுநீரை வெளியேற்றுவது, குப்பைகளை அகற்றுவது, சாலைகள் முழுவதும் குளோரின் பவுடர் தெளிப்பது, கொசுப்புழு உற்பத்தியை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

மழை நீர் தேங்கிய பகுதிகளில் பொதுமக்களுக்கு மருத்துவ முகாம்களும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 3,122 நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலமாக தற்போது வரை 2.43 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து பொதுமக்களுக்கு மருத்துவ சேவையை அளித்த தமிழகத்தில் இன்றைய தினம் 5 ஆயிரம் இடங்களில் மெகா மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. 

சென்னையில் 750 இடங்களில் நடைபெற உள்ள இந்த மருத்துவ முகாமில், பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை சுகாதாரத்துறையினர் வழங்க உள்ளனர். சென்னை ரிப்பன் மாளிகையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் கூட்டாக இந்த மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர். 

மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய சரும பாதிப்புகள், சுவாசப்பிரச்சினைகள், சளி, காய்ச்சல், வைரஸ், பூஞ்சை பாதிப்புகள் உள்ளிட்ட அனைத்திற்கும் தேவையான மருந்து, மாத்திரைகள் பொதுமக்களுக்கு மருத்துவர்கள் சார்பில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இருக்கும் குழுவினரை பயன்படுத்தி தற்போது சுகாதாரத்துறை சார்பில் இந்த நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

நீர் தேங்கிய இடங்களுக்கு மருத்துவ குழுவினர் வாகனங்கள் மூலம் நேரடியாக சென்று பொதுமக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குகின்றனர். இந்த நடமாடும் மருத்துவ சேவையானது இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வழங்கப்பட இருக்கிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 1,500 வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்