எலி செத்து கிடந்ததால்: ஏ.சி.எந்திரத்தை சுத்தம் செய்தபோது பாம்பு கடித்து முதியவர் சாவு

எலி செத்து கிடந்ததால் ஏ.சி. எந்திரத்தை சுத்தம் செய்தபோது நல்ல பாம்பு கடித்ததில் முதியவர் பரிதாபமாக இறந்த சம்பவம் பள்ளிக்கரணை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Update: 2021-11-15 21:22 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை வ.உ.சி. தெரு சிண்டிகேட் பேங்க் காலனியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ஸ்ரீதரன் (வயது 66). மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோருடன் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை ஸ்ரீதரன் வீட்டில் உள்ள ஏ.சி. எந்திரத்தின் உள்ளே இருந்து எலி ஒன்று செத்த நிலையில் கட்டிலில் வந்து விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதரன், ஏ.சி. எந்திரத்தில் சிக்கி, எலி செத்து இருக்கலாம் என்று கருதினார். பின்னர் செத்து கிடந்த எலியை வெளியே தூக்கி போட்டுவிட்டு ஏ.சி. எந்திரத்தின் உள்ளே சுத்தம் செய்ய முயன்றார்.

பாம்பு கடித்தது

இதற்காக ஸ்ரீதரன், ஏ.சி. எந்திரத்தின் உள்ளே கையை விட்டு சுத்தம் செய்தபோது, கையில் ஏதோ வழுவழுப்பாக தட்டுப்பட்டது. அது மின்சார வயர் என்று நினைத்த அவர், கையை வைத்து வெளியே இழுத்தார். ஆனால் உள்ளே இருந்தது மின்சார வயர் இல்லை. கொடியவிஷம் கொண்ட நல்லபாம்பு என்பது அவருக்கு தெரியவில்லை. அவர் கையால் இழுக்கவும், நல்ல பாம்பு அவரது கையின் 2 விரல்களில் கொத்தியது.

இதில் வலி தாங்க முடியாமல் அலறிய ஸ்ரீதரனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது குடும்பத்தினர், துடிதுடித்து கொண்டு இருந்த ஸ்ரீதரனை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர்.

உயிரிழந்தார்

அங்கு அவரை அனுமதிக்க மறுத்ததால் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு ஸ்ரீதரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது வீட்டின் பின்புறம் செடி கொடிகள் அதிகம் வளர்ந்து புதர்மண்டி கிடப்பதாக தெரிகிறது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அந்த புதருக்குள் இருந்த பாம்பு, ஜன்னல் வழியாக ஸ்ரீதரன் வீட்டுக்குள் புகுந்து ஏ.சி. எந்திரத்துக்குள் பதுங்கி இருக்கலாம் எனவும், அப்போது அதன் வாயில் கவ்வி வைத்திருந்த எலி, தவறி ஸ்ரீதரன் வீட்டு கட்டிலில் விழுந்து இருக்கலாம் எனவும் தெரிகிறது.

இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவரது வீட்டின் ஏ.சி.எந்திரத்தில் பதுங்கி இருந்த சுமார் 10 அடி நீளமுள்ள நல்ல பாம்பை, தாம்பரம் வனத்துறை ஊழியர்கள் உயிருடன் பிடித்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்