ராமாபுரம் எம்.ஜி.ஆர். தோட்டத்தில் சட்டவிரோத கட்டுமானத்தை எதிர்த்து வளர்ப்பு மகள் வழக்கு

ராமாபுரம் எம்.ஜி.ஆர். தோட்டத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டுமானத்தை எதிர்த்து வளர்ப்பு மகள் தொடர்ந்த வழக்கிற்கு சென்னை மாநகராட்சி பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-11-19 21:16 GMT
சென்னை,

எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள்களில் ஒருவரான கீதா, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். என்னையும், என் சகோதரிகள் சுதா, நிர்மலா, ஜானகி, ராதா ஆகியோரை வளர்ப்பு மகளாக தத்து எடுத்தார். ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். தோட்டத்தை எங்களுக்கு 1987-ம் ஆண்டு உயில் எழுதி வைத்தார்.

இதன்படி, நாங்கள் தோட்டத்தில் உள்ள பங்களாவில் வாய்மொழி பாகபிரிவினை மூலம் தனித்தனியாக வசித்து வருகிறோம். இந்த தோட்டத்தில் காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோருக்கான பள்ளிக்கூடம் உள்ளது. தோட்டம், கோவில், கார் நிறுத்தம், நீச்சல்குளம், சிறு திரையரங்கம் ஆகியவையும் உள்ளன.

தடை வேண்டும்

எம்.ஜி.ஆர். எழுதிய உயிலின்படி, அங்குள்ள சொத்துக்களை வகை மாற்றம் மற்றும் விற்பனை செய்யக்கூடாது. வாடகைக்கு விடக்கூடாது என்று உள்ளது. இதை மீறும் வகையில், எந்த ஒரு அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாக கைப்பந்து மைதானம், உள்ளரங்கு மற்றும் வெளியரங்கு மைதானங்களை வளர்ப்பு மகள்களில் ஒருவரான சுதாவும், அவரது மகன் ராமச்சந்திரனும் கட்டி வருகின்றனர். இதுகுறித்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை மாநகராட்சியில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சட்டவிரோத இந்த கட்டிடத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும். கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும்.

தள்ளிவைப்பு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், வி.சிவஞானம் ஆகியோர், வழக்கு குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர், வளசரவாக்கம் மண்டல அதிகாரி ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். விசாணையை 30-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்