சைதாப்பேட்டை பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

சைதாப்பேட்டை பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை கணக்கில் வராத ரூ.4 லட்சம் பறிமுதல்.

Update: 2021-11-19 23:01 GMT
சென்னை,

தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களை பொறுத்தமட்டில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் தான் லஞ்சம் அதிகம் புழங்குகிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது.

பத்திரப்பதிவு அலுவலகங்களில் எதற்கெடுத்தாலும் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. பத்திரப்பதிவு அலுவலகங்களில் நிலவி வரும் லஞ்சத்தை ஒழிக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தெற்கு மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் சில அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அங்கு சில அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று சைதாப்பேட்டை தெற்கு மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 96 ஆயிரத்து 500 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சில ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தெற்கு மாவட்ட பதிவாளர் மீனாகுமாரி உள்ளிட்ட அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம், விசாரணையில் கிடைக்கும் தகவல் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்