மோட்டார் வாகன ஆய்வாளர் கனகராஜ் குடும்பத்துக்கும் ரூ.1 கோடி வழங்கவேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

பணியில் இருக்கும்போது உயிரிழந்த மோட்டார் வாகன ஆய்வாளர் கனகராஜ் குடும்பத்துக்கும் ரூ.1 கோடி வழங்கவேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2021-11-23 20:52 GMT
சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா அல்லது சட்டவிரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா என்று பொதுமக்கள் அச்சப்படும் அளவுக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், மோட்டார் வாகன ஆய்வாளர் என அரசு அதிகாரிகள் உயிரிழந்திருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதோடு, தமிழகத்தின் பொருளாதாரத்தை பின்னுக்குத் தள்ளிவிடுமோ என்ற ஐயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கொலை நடந்து முடிந்த மறுநாளே, கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து வாகன ஆய்வாளராக பணியாற்றிவந்த நா.கனகராஜ் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, வாகனம் மோதியதில் உயிரிழந்திருக்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடையாளம் தெரியாத வாகனம் என்று குறிப்பிடுவதை வைத்து பார்க்கும்போதும், மோதிய வாகனம் நிற்காமல் சென்றதை வைத்து பார்க்கும்போதும் இது விபத்தாக இருக்காதோ என்ற சந்தேகம் அனைவர் மனதிலும் எழுகிறது.

ரூ.1 கோடி வழங்கவேண்டும்

காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது கொலையுண்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 கோடியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்க உத்தரவிட்டுள்ள முதல்-அமைச்சர், பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த மோட்டார் வாகன ஆய்வாளரின் குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.50 லட்சம் மட்டும் வழங்கியிருப்பது பாரபட்சமாக இருக்கிறது. எனவே முதல்-அமைச்சர், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு முக்கிய காரணியாக விளங்கும் சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதில் தனிக்கவனம் செலுத்தவேண்டும்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும். இதேபோல மோட்டார் வாகன ஆய்வாளர் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பதை தீர விசாரித்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கவேண்டும். மோட்டார் வாகன ஆய்வாளரும் பணியில் இருக்கும்போது உயிரிழந்ததால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு வழங்கியதைப்போல முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 கோடி வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்