சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் கவர்னர் தரிசனம்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவர் தமிழக பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து சென்றிருந்தார்.

Update: 2021-11-25 20:22 GMT
நாகர்கோவில்,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் 2 நாள் சுற்றுப்பயணமாக குமரி மாவட்டத்துக்கு வந்தார். நேற்றுமுன்தினம் கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை பகுதிக்கு தனி படகு மூலமாக சென்று பார்வையிட்டார்.

கோவிலில் தரிசனம்

இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக குமரி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட கவர்னர் ஆர்.என்.ரவி காலை 7.40 மணிக்கு சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்றார். அவருக்கு மேளதாளங்கள் முழங்க பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

தமிழக பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்தபடி கவர்னர் கோவிலுக்கு வந்திருந்தார். பின்னர் கோவில் அலுவலக அறையில் சட்டையை கழற்றி விட்டு தன்னுடைய குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய புறப்பட்டார்.

இசைத்தூணை தட்டிப்பார்த்தார்

தட்சிணாமூர்த்தி சன்னதி, கொன்றையடி சன்னதி, நவக்கிரக மண்டபம், நீலகண்ட விநாயகர் சன்னதி ஆகிய இடங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலில் உள்ள இசைவரும் கல் தூண்களை தனது குடும்பத்துடன் தட்டி ரசித்தார்.

இதை தொடர்ந்து தாணுமாலயன் சன்னதியில் மூலவருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டார். மேலும் 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சாமிக்கு தனது குடும்பத்தில் உள்ள அனைவரது பெயரிலும் அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு நடத்தினார். மேலும் சங்கினால் உருவாக்கப்பட்ட நந்தியை வணங்கினார். ஒரு மணி நேரம் கோவிலில் தரிசனம் செய்த பிறகு அவர் அங்கிருந்து மீண்டும் கன்னியாகுமரி சென்றார்.

வெங்கடாசலபதி கோவில்

பின்னர் விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திராவுக்கு குடும்பத்துடன் சென்றார். கேந்திராவில் உள்ள ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடத்தை அவர் பார்வையிட்டார். அதன்பிறகு கேந்திர வளாகத்தில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்