எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணி கைது

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணி கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2021-11-28 05:13 GMT
கோப்புப்படம்
சேலம்,

முன்னாள் முதலமைச்சரும்  தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியிடம் உதவியாளராக இருந்து வருபவர் மணி. இவர் அரசு பணி வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்துவிட்டதாக கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். 

இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் எடப்பாடி பழனிசாமியின்  தனி உதவியாளர் மணி மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.  இதையடுத்து மணி மற்றும் செல்வகுமார் ஆகிய இருவரும் பணம் வாங்கி மோசடி செய்ததாக இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த மணி, இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.37 கோடி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் இந்த கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். அவரின் முன் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மணியை கைது செய்துள்ளனர். 

மேலும் செய்திகள்