கனமழையால் பாதிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டதுடன், பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

Update: 2021-11-28 23:54 GMT
சென்னை,

தமிழகத்தில் தொடரும் வடகிழக்கு பருவமழையையொட்டியும், வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் காரணமாகவும் சென்னை மற்றும் மாநிலம் முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 7-ந்தேதி தொடங்கி இரவு, பகல் பாராமல் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியும் வருகிறார்.

இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சி, பத்மாவதி நகரில் வெள்ளப் பாதிப்புகளை நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்து, தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்றிட துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

மேலும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பத்மாவதி நகரில் இருந்து வேலப்பன்சாவடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வரை 2 கி.மீ. நடந்தே சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு, பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து நிவாரண நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அலுவலர்களை அறிவுறுத்தினார்.

திருவேற்காடு நகராட்சி, வேலப்பன்சாவடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி நிவாரண முகாமை பார்வையிட்டு, அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு மு.க.ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார்.

மேலும் அதே பள்ளியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமையும் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

எந்திரம் மூலம் வெளியேற்றும் பணி

அதனைத் தொடர்ந்து, பூந்தமல்லி நகராட்சி, அம்மன் கோவில் தெரு, காவலர் குடியிருப்பில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டு, தேங்கியுள்ள மழைநீரை விரைந்து அகற்றிட துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தி, பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை அவர் வழங்கினார்.

ஆவடி மாநகராட்சி, ஸ்ரீராம் நகர் மற்றும் திருமுல்லைவாயல், கணபதி நகர் ஆகிய பகுதிகளில் கனமழையின் காரணமாக வெள்ளம் தேங்கியுள்ள மழைநீரை எந்திரம் மூலம் வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருவதை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுரை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்ட 4 இடங்களிலும் சாலை மற்றும் தெருக்களில் பெருந்திரளாக நின்றிருந்த பொதுமக்களிடம், மழைக்காலங்களில் நோய்த்தொற்று ஏற்படாவண்ணம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், கொரோனா காலத்தில் அனைவரும் முக கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றும், கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் பரிவுடன் எடுத்துரைத்தார்.

கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட செல்லும் வழியில், ஆவடி மாநகராட்சி, மூர்த்தி நகர், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலையோரக் கடையில் மு.க.ஸ்டாலின் தேநீர் அருந்தி, பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.

தடுப்பூசி முகாமில் ஆய்வு

தி.மு.க. சார்பில் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட நிவாரண உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு வழங்கினார். சென்னை, வில்லிவாக்கத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு அருகில் நடைபெற்று வரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை பார்வையிட்டு, மருத்துவ அலுவலர்களிடம், “எவ்வளவு நபர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்கள்?” எனக் கேட்டறிந்து, முகாமிற்கு வரும் பொதுமக்கள் அனைவருக்கும் மாலை வரை இருந்து தடுப்பூசி செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், எம்.எல்.ஏ. ஆ.கிருஷ்ணசாமி, பெருநகர சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், மாவட்ட நிவாரணப் பணிகள் கண்காணிப்பு அலுவலர் டாக்டர் இரா.ஆனந்தகுமார், மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்