பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள் தேர்தலை 3 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள் தேர்தலை 3 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-11-30 22:01 GMT
சென்னை,

சென்னை பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் பச்சையப்பன் கல்லூரி, கந்தசாமி நாயுடு கல்லூரி, செல்லம்மாள் கல்லூரி உள்ளிட்ட 6 கல்லூரிகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் இயங்கிவருகின்றன.

இந்தநிலையில் பச்சையப்பன் அறக்கட்டளையில் முறைகேடுகள் நடப்பதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, அறக்கட்டளை தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பி.சண்முகத்தை நியமித்து, உறுப்பினர்கள் தேர்தலை 6 மாதங்களுக்குள் நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

குத்தகை ரத்து

மேலும், பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான அரங்கங்களை ‘முகூர்த்தம் ஈவன்ட் மேனேஜ்மென்ட்' என்ற நிறுவனத்துக்கு வழங்கிய குத்தகையை ரத்து செய்தார். அரங்கங்களை 10 நாட்களுக்குள் அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்திருந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு, இந்த வழக்கை அனைத்து அம்சங்களோடு தனி நீதிபதி எம்.சுந்தர் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து இந்த வழக்கை நீதிபதி சுந்தர் விசாரித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

தேர்தல்

இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டில் இருந்து நீதிபதி சுந்தர் நேற்று தீர்ப்பளித்தார். அதில், பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள் தேர்தலை புதிய திட்டத்தின்கீழ், 3 மாதத்துக்குள் நடத்த வேண்டும். அறக்கட்டளை தொடர்பான வழக்குகளை சிவில் வழக்காக தொடரலாம். சொத்தாட்சியர், அட்வகேட் ஜெனரலுடன் கலந்து ஆலோசித்து இந்த தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்