தமிழகத்தில் மழை வெகுவாக குறைந்தது - கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பனிதாக்கம் அதிகரித்து இருப்பதால், மழைப்பொழிவு வெகுவாக குறைந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Update: 2021-12-12 22:58 GMT
சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. அந்த மாதத்தில் பெய்ய வேண்டிய 17 செ.மீ. என்ற இயல்பான அளவை விட 29 சதவீதம் அதிகரித்து, 22 செ.மீ. என்ற அளவில் பதிவானது.

ஆனால் அதற்கு அடுத்த மாதமான நவம்பரில் பருவமழை ருத்ரதாண்டவம் ஆடியது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அதி மற்றும் மிக கன மழை கொட்டியது. சில இடங்களில் கனமழையும் பெய்தது. அந்த மாதத்தில் தமிழகத்தில் பெய்ய வேண்டிய 17 செ.மீ. மழை என்ற அளவை விட 137 சதவீதம் அதிகமாக 42 செ.மீ. மழை பதிவாகியது.

இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான ஆறுகள், ஏரிகள், அணைகள், குளங்கள் நிரம்பின.

அதன் தொடர்ச்சியாக இந்த மாதத்திலும் மழை இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், இம்மாத தொடக்கத்தில் இருந்து மழை குறைவாகவே இருந்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் பனி தாக்கம் அதிகரித்து வருவதால் மழைப்பொழிவு வெகுவாக குறைந்து வருவதை பார்க்க முடிகிறது.

கடலோர மாவட்டங்களில் மழை

அதேநேரம் வடகிழக்கு பருவகாற்றின் காரணமாக இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

நாளை மறுதினமும் (புதன்கிழமை), 16-ந் தேதியும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொறுத்தவரையில் இன்று வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை அளவு

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ‘செய்யாறு 7 செ.மீ., மாமல்லபுரம் 6 செ.மீ., காட்டுமன்னார்கோவில் 5 செ.மீ., திருமானூர், சமயபுரம், திருக்காட்டுப்பள்ளி, வந்தவாசி தலா 4 செ.மீ., கொள்ளிடம், உத்திரமேரூர், அரிமளம், ஜெயங்கொண்டம், சீர்காழி, திருப்பத்தூர் தலா 3 செ.மீ., ஆரணி, திருவண்ணாமலை, திருவையாறு, தாம்பரம், பரங்கிப்பேட்டை, நாகப்பட்டினம், குன்னூர், கரம்பக்குடி தலா 2 செ.மீ., சென்னை விமானநிலையம், வேதாரண்யம், சிவகாசி தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலம் வழக்கமாக அக்டோபர் தொடங்கி டிசம்பர் மாதம் இறுதி வரை இருக்கும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை வருகிற ஜனவரி மாதம் 2-வது வாரம் வரை நீடிக்கலாம் என்று ஏற்கனவே ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டது.

இயல்பை விட அதிகம்

எனினும் இனி வரக்கூடிய நாட்களில் மழை எந்த அளவு இருக்கும் என்பது பற்றி இதுவரை வானிலை ஆய்வு மையம் எந்தவித முன்னறிவிப்பும் வெளியிடவில்லை.

பருவமழை தொடங்கிய கடந்த அக்டோபர் மாதம் முதல் நேற்று வரை தமிழகத்தில் பதிவான மழை அளவு 69 செ.மீ. ஆகும். ஆனால் வடகிழக்கு பருவமழை காலத்தில் மொத்தத்தில் தமிழகத்தில் 44 செ.மீ. மழை பதிவாகும். எனவே இது இயல்பை விட 71 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்