திருச்சியில் பள்ளி மாணவர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று...

திருச்சியில் பள்ளி மாணவர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-12-20 17:22 GMT
திருச்சி,

திருச்சி மாவட்டம் குழுமணி சாலையில் சீராத்தோப்பு பகுதியில் அமைந்துள்ள, அரசு உயர்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு, கடந்த சில தினங்களாக காய்ச்சல் இருந்தது. அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

தொடர்ந்து அந்த மாணவிக்கு சளி தொந்தரவும் இருந்ததால், மருத்துவர்கள் அவரை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினர். சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதேபோல் மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவிகள் 4 பேருக்கும், மாணவர்கள் 3 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தொற்றுக்குள்ளான மாணவ, மாணவிகள் 8 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து பள்ளியில் உள்ள 600 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தனியார் பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து இவ்விரு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள், ஆசிரியர், ஆசிரியைகளுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா? என்று சுகாதாரத் துறை மூலம் பரிசோதனை நடைபெற்று வருகிறது.

தொற்று பாதிப்பான மாணவ, மாணவிகளின் குடும்பத்தினருக்கும் பரிசோதனை மேற்கொண்டு வருகிறது. தொற்று உறுதி செய்யப்பட்டதால் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் முழுவதும் சுகாதாரத்துறை ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்