சென்னை போரூர் அருகே லாரி மீது கார் மோதல்: தந்தை-மகன் உள்பட 3 அய்யப்ப பக்தர்கள் பலி

சென்னை போரூர் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் தந்தை-மகன் உள்பட 3 அய்யப்ப பக்தர்கள் பரிதாபமாக இறந்தனர். சபரிமலை சென்று சாமி தரிசனம் முடிந்து வீடு திரும்பியவர்களுக்கு இந்த சோகம் நேர்ந்து விட்டது.

Update: 2021-12-21 21:29 GMT
பூந்தமல்லி,

சென்னை மாங்காடு அடுத்த கொழுமணிவாக்கத்தைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 60), எலக்ட்ரீசியன். இவருடைய மகன் மகேஷ் (33). இவருடைய நண்பர் சின்னராஜ் (28). சாப்ட்வேர் என்ஜினீயர்களான இவர்கள் இருவரும் ஒரே சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். சேலத்தை சேர்ந்தவரான சின்னராஜ், மகேஷ் வீட்டின் அருகேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலை செய்து வந்தார்.

அய்யப்ப பக்தர்களான சங்கர், மகேஷ், சின்னராஜ் ஆகிய 3 பேரும் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு 3 பேரும் காரிலேயே சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று அதிகாலையில் சென்னைக்கு திரும்பி வந்தனர். காரை மகேஷ் ஓட்டி வந்தார்.

3 பேர் பலி

அதிகாலை 3 மணி அளவில் போரூர் அருகே மவுண்ட்-பூந்தமல்லி சாலையில் வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நிறுத்தி இருந்த லாரியின் பின் பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது.

காரில் இருந்த 3 பேரும் இடிபாட்டுக்குள் சிக்கிக்கொண்டனர். இதில் சங்கர் மற்றும் சின்னராஜ் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய மகேஷ், சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீஸ் விசாரணை

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சபரிமலை சென்றுவிட்டு திரும்பிய தந்தை-மகன் உள்பட 3 அய்யப்ப பக்தர்கள், சாலை விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


மேலும் செய்திகள்