பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் பரவலான மழையால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2022-01-02 09:06 GMT
நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்தது. குறிப்பாக நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்தது. இதனால் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று வினாடிக்கு 1,262 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து பாசனத்துக்காக 960 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இதேபோல் மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 300 கன அடி வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து 656 அடியாக அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக 260 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக அம்பையில் 42 மில்லி மீட்டர், மணிமுத்தாறு அணைப் பகுதியில் 40 மில்லி மீட்டர், சேரன்மகாதேவி பகுதியில் 30 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடனாநதி அணை பகுதியில் 10 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மேலும் செய்திகள்