அறுவடைக்கு தயரான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின- விவசாயிகள் கண்ணீர்; சேதம் கணக்கெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது.

Update: 2022-01-02 11:18 GMT
சென்னை,

தமிழகத்தில் கடலோர பகுதியில் ஏற்பட்ட வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினமும், நேற்றும் மழை பெய்தது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதில் பல இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கின. 

இன்னும் ஒரிரு நாட்களில் அறுவடை செய்ய இருந்த நேரத்தில் தற்போது பெய்த மழையில் நெற்பயிர்கள் நாசமானதை கண்டு விவசாயிகள் கண்ணீர் வடித்தனர். நெற்பயிர்கள் சேதத்தால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

நெற்பயிர்கள் சேதத்தை வேளாண்மை துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். இன்று காலை நேர கணக்கெடுப்பின்படி வெண்ணலாங்குடி, அறந்தாங்கி, பொன்னமராவதி, அன்னவாசல், திருவரங்குளம், திருமயம் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 200 எக்டேர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது தெரிந்தது. 

தொடர்ந்து கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் இன்று காலை முதல் தற்போது வரை மழை பெய்யவில்லை. மாவட்டத்தில் நேற்று முதல் இன்று காலை 8.30 மணி நேர நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் 1,340 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகி இருந்தது. அதிகபட்சமாக திருமயம் பகுதியில் 132 மில்லி மீட்டர் அளவும், குறைந்தபட்சமாக விராலிமலையில் 10.50 மில்லி மீட்டர் அளவும் பதிவானது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்