கோவில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக கோவில்களில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்களுக்கு அகவிலைப்படி மற்றும் பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-01-12 09:45 GMT
சென்னை, 

தமிழக அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை 1-1-2022 முதல் 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிடவும், ‘C’ மற்றும் ‘D’ பிரிவுப் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிடவும் 8,894 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்திருந்தார். 

மேலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1-1-2022 முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என 7-9-2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். 

இந்நிலையில் தமிழகத்தில் கோவில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, கோவில்களில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்களுக்கு அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வால் சீட்டு விற்பனையாளர்கள், அர்ச்சகர்களுக்கான மாத சாம்பலாம் ரூ.2,500-ஆகவும், கோவில் காவல் பணியாளர்களுக்கு ரூ.2,200, துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.1,400 ஆகவும் சம்பளம் உயர்கிறது. மேலும், கோயில் பணியாளர்களுக்கான பொங்கல் போனசை ரூ.1,000-லிருந்து ரூ.2,000-ஆக உயர்த்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் செய்திகள்