போலீசார் ரோந்து பணிக்கு 106 புதிய வாகனங்கள் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

தமிழகத்தில் போலீசார் ரோந்து பணிக்கு 106 புதிய வாகனங்கள் சேவையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார்.

Update: 2022-01-13 19:01 GMT
சென்னை,

காவல்துறையின் 2021-22-ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையில், அனைத்து போலீஸ் கமிஷனர் அலுவலகங்களின் கீழ் செயல்படும் காவல் நிலையங்களுக்கு (சென்னை மாநகர காவல் நீங்கலாக) தலா 1 நான்கு சக்கர ரோந்து வாகனம் என மொத்தம் 106 ரோந்து வாகனங்கள் ரூ.10 கோடி செலவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச்செயலகத்தில் காவல்துறையின் ரோந்து பணிக்கு கூடுதல் உபகரணங்களுடன் ரூ.9 கோடியே 76 லட்சத்து 67 ஆயிரத்து 340 மதிப்பீட்டிலான 106 மகிந்திரா பொலிரோ நியோ வாகனங்களை வழங்கிடும் விதமாக, முதற்கட்டமாக ஆவடி மற்றும் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலக பயன்பாட்டுக்காக 20 வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் க.பொன்முடி, தலைமை செயலாளர் வெ.இறையன்பு, கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, பொதுத்துறை செயலாளர் டி.ஜெகநாதன், போலீஸ் கமிஷனர்கள் மு.ரவி (தாம்பரம்), சந்தீப்ராய் ரத்தோர் (ஆவடி) ஆகியோர் கலந்துகொண்டனர்.

கட்டுப்பாட்டு அறையில் இருந்து...

இந்த காவல் ரோந்து வாகனத்தில் பொது அறிவிப்பு செய்யும் ஒலிபெருக்கி மற்றும் ரோந்து வாகனத்தை தொலைவில் இருந்து அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் மூன்று வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இவ்வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட காவல் கட்டுப்பாட்டறையுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதன்மூலம் காவல் கட்டுப்பாட்டறையில் இருந்து இந்த வாகனத்தின் நகர்வை அறியவும், அவசர உதவி தேவைப்படும் இடங்களுக்கு செல்லவும் அருகில் உள்ள ரோந்து வாகனத்திற்கு காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கட்டளைகளை அளிக்கவும் முடியும். இதன்மூலம் பொதுமக்களிடம் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு வரும் அவசர உதவி அழைப்புகளுக்கு குறைந்தபட்ச கால அவகாசத்தில் சம்பவ இடங்களுக்கு செல்ல முடியும்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்