பதநீர் இறக்குபவர், விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது

பதநீர் இறக்குபவர், விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு.

Update: 2022-01-13 21:10 GMT
சென்னை,

பதநீர் இறக்குபவர்கள், விற்பவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு சைலேந்திரபாபு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பனைமரம், தென்னை மரம் ஆகியவற்றில் இருந்து பதநீர் இறக்குவது மற்றும் பனைவெல்லம் தயாரிப்பது போன்றவை சட்டபூர்வமான செயல்கள் ஆகும். இதற்காக அரசு கூட்டுறவு பனைவெல்ல சங்கங்களும் உள்ளன. பதநீர் ஒரு இயற்கையான குளிர்பானம் ஆகும். பதநீர் சாலை ஓரங்களில் விற்பனை செய்யப்படுகிறது. சில காவல் நிலையங்களில் இந்த வேளாண் பணியை செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதாகவும், கைது நடவடிக்கை எடுப்பதாகவும், தொழிலாளர்களை துன்புறுத்துவதாகவும் புகார்கள் வந்துள்ளன.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மாநகர போலீஸ் கமிஷனர்கள், இயற்கை பானமான பதநீரை இறக்குபவர்கள், விற்பவர்கள், பனை வெல்லம் தயாரிப்பவர்கள் மற்றும் இது சார்ந்த தொழில் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை கைவிட வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்