காணும் பொங்கல்; சென்னையில் கடற்கரை, பூங்காவில் கூட போலீசார் தடை

சென்னையில் முழு ஊரடங்கான இன்று, காணும் பொங்கல் கொண்டாட்டம் என்ற பெயரில், மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் கூட போலீசார் தடை விதித்து உள்ளனர்.

Update: 2022-01-16 00:17 GMT


சென்னை,



தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.  எனினும், தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3 நாட்களாக பொங்கல் விழா களைகட்டும்.

இதனையடுத்து, சென்னை மெரினா கடற்கரை, பூங்கா மற்றும் சுற்றுலா தலங்களில் குடும்பத்துடன் ஒன்று கூடி உற்சாகமாக மக்கள் கொண்டாடி மகிழ்வது வழக்கம்.

கொரோனா பரவல் காரணமாக, காணும் பொங்கல் கொண்டாட்டம் 2 ஆண்டுகளாகவே களையிழந்து காணப்படுகிறது.  இந்நிலையில், முழு ஊரடங்கை முன்னிட்டு பொதுமக்கள் மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்கு மட்டுமே வெளியே வர வேண்டும். மீறினால், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த தடையை மீறி பொது இடங்களில், காணும் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க, மாநிலம் முழுதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.  கடற்கரை, பூங்கா மற்றும் பண்ணை வீடுகள் அதிகம் உள்ள இடங்கள், சுற்றுலா தலங்கள் இருக்கும் பகுதிகளில், 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில், 10 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் காணும் பொங்கல் இன்று கொண்டாடப்படும் நிலையில், முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. இதனால், பொது மக்கள் வீடு மற்றும் விவசாய தோட்டங்களில் காணும் பொங்கலை கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்