பஞ்சுக்கான இறக்குமதி வரியை நீக்க வேண்டும்; ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தல்

பஞ்சுக்கான இறக்குமதி வரியை நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

Update: 2022-01-18 00:22 GMT

சென்னை,


அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், ஜவுளி தொழில் நூல் விலை உயா்வு காரணமாக கடும் சவால்களை சந்தித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் பஞ்சு விலைக்கு ஏற்றவாறு நூல் விலையை ஆலைகள் நிா்ணயம் செய்கின்றன. இந்த ஆண்டு ஜனவரி முதல் நூல் விலை கிலோவுக்கு ரூ.30 உயா்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் ரூ.150 வரை உயா்ந்துள்ளது.

கடந்த ஆண்டில் இறக்குமதி செய்யப்படும் பஞ்சுக்கு 11 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. இதனால் இறக்குமதி அளவு குறைந்து, உள்ளூரில் பஞ்சுக்கு விலை உயா்கிறது. 2021 இறுதியில் ரூ.64 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கேண்டி பருத்தி பஞ்சு, தற்போது ரூ.73 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பஞ்சின் விலை இரட்டிப்பாகியுள்ளது.

எனவே, ஜவுளி தொழிலில் நிலவும் பிரச்னைகளை மத்திய அரசின் கவனத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து சென்று, தேவையான அழுத்தத்தை அளித்து, இறக்குமதி செய்யப்படும் பஞ்சுக்கான வரியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

மேலும் செய்திகள்