பிரபல ரவுடி பினு அதிரடி கைது பட்டாகத்தியால் கேக் வெட்டும் கலாசாரத்தை அறிமுகப்படுத்தியவர்

சென்னையில் பிரபல ரவுடி பினு அதிரடியாக கைது செய்யப்பட்டார். பட்டாகத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் விழாவை பொது இடத்தில் கொண்டாடும் கலாசாரத்தை சென்னையில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.

Update: 2022-01-18 21:24 GMT
சென்னை,

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி பினு (வயது 53). இவர் மீது 3 கொலை வழக்குகள் உள்பட 18 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. சென்னையில் ரவுடிகள் பட்டாகத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடும் கலாசாரம் தற்போது பெரிய அளவில் பரவி உள்ளது. ரவுடிகள் மட்டும் அல்லாமல், அப்பாவி இளைஞர்கள்கூட இந்த கலாசாரத்தை பின்பற்றி போலீசாரால் கைது செய்யப்படுகிறார்கள். இந்த பட்டாகத்தி கேக் கலாசாரத்தை சென்னையில் முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் ரவுடி பினுதான்.

அவர் சமீபகாலமாக தன் மீதான வழக்குகளில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். ஆனால் அவ்வப்போது சூளைமேடு பகுதிக்கு வந்து மாமூல் கேட்டு தொல்லை கொடுப்பதாகவும் இவர் மீது புகார்கள் வந்தன. இதனால் இவரது நடமாட்டத்தை கண்காணித்து, கைது செய்யும்படி கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார்.

கைதானார்

சூளைமேட்டில் இருந்து கொளப்பாக்கத்துக்கு இருப்பிடத்தை மாற்றிய பினு, போரூர் பகுதிக்கு அடிக்கடி வந்து செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் ரவி அபிராம், சூளைமேடு பொறுப்பு இன்ஸ்பெக்டர் சேட்டு ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் இரவு போரூர் பகுதியில் வைத்து ரவுடி பினுவை கைது செய்தனர்.

அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர் நீதிமன்ற காவலில் சைதாப்பேட்டை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்