விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க கோரி: டெல்டா மாவட்டங்களில் 22-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க கோரி: டெல்டா மாவட்டங்களில் 22-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

Update: 2022-01-19 18:57 GMT
சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ..பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்ததால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவித்தொகையை உடனடியாக வழங்க கோரி ஏற்கனவே அறிக்கைகள் வெளியிட்டு இருந்தோம். ஆனால் அதற்கு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத்தொகையை வழங்காத தமிழக அரசை கண்டித்தும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு, அவர்களுக்கு உரிய நிவாரணத்தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி, விவசாயிகளுடன் இணைந்து வருகிற 22-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணியளவில் டெல்டா மாவட்டங்களில் உள்ள தாலுகா அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்த ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் தலைமைக்கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலந்து கொள்வார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

மேலும் செய்திகள்