டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழக வாகனம் இடம் பெறாததற்கு மாநில அரசுதான் முழுப் பொறுப்பு

டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழக வாகனம் இந்த ஆண்டு இடம் பெறாததற்கு முழுப் பொறுப்பு தமிழக அரசுதான் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

Update: 2022-01-20 22:03 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே நவயுகம் மற்றும் ஞானோதயம் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் ஜெய் குருஜி சமாதி உள்ளது. இங்கு நேற்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வந்து ஜெய்குருஜியின் சமாதி மற்றும் உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உள்ளாட்சித் தேர்தலுக்கு நாங்கள் தயாராக உள்ளோம். பாரத பிரதமரின் 80 சதவீத திட்டங்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மூலம் தான் நடந்து வருகிறது. இதனால் உள்ளாட்சியில் ஊழல் செய்யாத நல்ல பிரதிநிதிகளை அமர்த்தி மக்களுக்கு நல்லதை செய்ய நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்.

பாடநூலில் பாரதியார்

தமிழகப் பாடநூலில் பல மாற்றத்தை கொண்டுவர வேண்டும். குறிப்பாக பாரதியின் பாடல்கள், கவிதை, கருத்துகள் என பாரதியின் பங்களிப்பு அதிகமாக பாடநூலில் இடம் பெற வேண்டும். புதிய இந்தியா எப்படி இருக்க வேண்டும் என முன்பே நிறைய தகவல்களை அவர் எழுதி வைத்து சென்றுள்ளார்.

அதேபோல் ஆங்கிலேயர்களை எதிர்த்து வெற்றி கொண்ட பெருமை வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் அவரின் படைத்தளபதி குயிலி ஆகியோரையே சாரும். இவர்களின் வரலாற்றையும் பாடநூலில் கொண்டு வர வேண்டும் என தமிழக முதல்-அமைச்சரை பா.ஜ.க. சார்பில் அறிவுறுத்தி இருக்கிறோம்.

சரிவர வேலைசெய்யவில்லை

கடந்த 3 ஆண்டுகளில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக வாகனம் இடம் பெற்றிருந்தது. அப்படி இருக்கும்போது இந்த ஆண்டு இடம் பெறவில்லை என்றால் அதற்கு முழுப் பொறுப்பு தமிழக அரசுதான். அப்போது பணியாற்றிய அதே அரசு அதிகாரிகள்தான் தற்போதும் பணியாற்றி வருகிறார்கள். தற்போது ஏன் அவர்கள் சரிவர வேலை செய்யவில்லை?

டெல்லி குடியரசு தின விழாவில் தமிழகத்தின் பங்களிப்பு இல்லாதது வருந்தக்கூடியது. இதை அடுத்த ஆண்டு சரி செய்ய அனைவரும் முயற்சி எடுக்க வேண்டுமே தவிர மத்திய அரசின் மீது குற்றம் சொல்லி அதன் மூலமாக அரசியல் லாபத்தை தி.மு.க. தேடக்கூடாது.

நிரூபிக்க வேண்டும்

தி.மு.க. அரசை பொறுத்தவரை மாதம் ஒரு கோட்டா வைத்துள்ளார்கள். அதன்படி இந்த மாத கோட்டாவில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் சோதனை நடத்தியுள்ளார்கள். நீதிமன்றம் இருக்கிறது. இங்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருக்கிறார்களா? என்பது உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் நிரூபிக்க வேண்டும். அப்படி தவறு செய்திருந்தால் யாராக இருந்தாலும் தண்டனை கிடைக்க வேண்டும். இதில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்