கோவில் குளியலறையில் 3 ரகசிய கேமராக்கள் பக்தர்கள் அதிர்ச்சி

கோவில் குளியலறைகளில் 3 ரகசிய கேமராக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை வைத்தது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-01-21 20:52 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சித்தவநாயக்கன்பட்டியில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் பவுர்ணமி பூஜையும், மாசி கொடை விழாவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த கோவிலுக்கு வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக தங்குமிடம், கழிவறைகள், குளியலறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

கடந்த 17-ந்தேதி பவுர்ணமி பூஜையை முன்னிட்டு கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். அப்போது கோவில் வளாகத்தில் உள்ள குளியலறையில் குளிக்க சென்ற பெண் பக்தர் ஒருவர், அங்கு மறைவான இடத்தில் ரகசிய கேமரா இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து, கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்தார்.

நவீன வசதி கொண்டது

தொடர்ந்து குளியலறைகள் முழுவதும் கோவில் ஊழியர்கள் சோதனை செய்தபோது, அங்கு மேலும் 2 இடங்களில் ரகசிய கேமராக்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோவில் பூசாரி முருகன், விளாத்திகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதையடுத்து போலீசார் விரைந்து சென்று, குளியலறைகளில் இருந்த 3 கேமராக்களையும் பறிமுதல் செய்தனர். அவற்றில் ஒரு கேமரா மட்டும் புளூடூத், மெமரி கார்டு, பென் டிரைவ் உள்ளிட்ட நவீன வசதிகள் கொண்டது என்றும், மற்ற 2 கேமராக்கள் ஒயர் இணைப்புடன் செயல்படக்கூடிய சாதாரண ரகத்தைச் சேர்ந்தவை என்பதும் தெரியவந்தது.

தீவிர விசாரணை

கோவில் குளியலறைகளில் கண்காணிப்பு கேமராக்களை வைத்தது யார்? அவற்றில் பதிவான குளியலறை காட்சிகளை யாரேனும் சேகரித்து வைத்துள்ளனரா? என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் குளியலறைகளில் 3 ரகசிய கேமராக்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்