தமிழகத்தில் 600 இடங்களில் இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம்!

தமிழகம் முழுவதும் 600 இடங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

Update: 2022-01-27 04:35 GMT
சென்னை,

தமிழகத்தில் முன்களப் பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கும்,  60 வயதிற்கு மேற்பட்ட இணை நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு, கடந்த வியாழக்கிழமை முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகின்றது.

தமிழகத்தில் ஜனவரியில் மட்டும் 10 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட தகுதி பெற்றவர்களாக உள்ளனர்.எனவே வாரந்தோறும் சனிக் கிழமைகளில் நடத்தப்படும் மெகா தடுப்பூசி முகாம்களை போல வியாழக்கிழமை தோறும் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிக்குட்பட்ட 600 பகுதிகளில்  தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

சென்னையில் மட்டும் 160 நகர்ப்புற சுகாதார மையங்களில்  பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நகர்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி கட்டாயம் இல்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 2வது தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவு பெற்றவர்கள் மட்டுமே பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.

காலை 8 மணிக்கு தொடங்கிய தடுப்பூசி முகாம் மாலை 5 மணி வரை நடைபெறும். எனவே, தகுதியுடைய நபர்கள் இந்த முகாமில் சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் செய்திகள்