அரசு பஸ்களில் மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்த கூடாது டிரைவர், கண்டக்டர்களுக்கு அரசு உத்தரவு

அரசு பஸ்களில் மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும்போது அவர்களுக்கு எரிச்சலூட்டும் வகையில் ஏளனமாகவோ, இழிவாகவோ நடத்தக் கூடாது என்று டிரைவர், கண்டக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-01-27 23:09 GMT
சென்னை,

இதுகுறித்து அனைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர்களுக்கு போக்குவரத்துக் கழகங்களின் முதன்மைச் செயலாளர் மற்றும் தலைவர் கே.கோபால் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பஸ்களில் மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும்போது டிரைவர் மற்றும் கண்டக்டர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து இந்த அறிவுரை வழங்கப்படுகிறது.

அதன்படி, பஸ் நிறுத்தங்களில் பஸ்சிற்காக மாற்றுத்திறனாளி பயணிகள் நிற்கும்போது, முறையாக பஸ்சை நிறுத்தி அவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும். ஒரு மாற்றுத்திறனாளி பயணி நின்றாலும் அவரை பஸ்சில் ஏற்றிச்செல்ல வேண்டும்.

பஸ் நிற்பதற்காக குறிக்கப்பட்ட இடத்தில் பஸ்சை நிறுத்த வேண்டும். அதற்கு முன்போ அல்லது அதைத் தாண்டியோ பஸ்சை நிறுத்தி அவர்களுக்கு இடையூறு செய்யக் கூடாது.

ஏளனமாக.....

பஸ்சில் ஏறும் மாற்றுத்திறனாளியை, பஸ்சில் இடமில்லை என்று கூறி அவரை இறக்கிவிடக் கூடாது. மாற்றுத்திறனாளி இருக்கையில் வேறு யாராவது அமர்ந்திருந்தால் அவர்களை எழுப்பி மாற்றுத்திறனாளியை அமரச் செய்ய வேண்டும்.

மாற்றுத்திறனாளி பயணிகளிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக் கூடாது. அவர்களை உபசரிப்புடனும் அன்புடனும் நடத்த வேண்டும். அவர்கள் ஏறும்போதும், இறங்கும்போதும் கண்காணித்து, டிரைவருக்கு சமிக்ஞை செய்து பாதுகாப்பாக ஏற்றி, இறக்கிவிட வேண்டும்.

கட்டண சலுகை

மாற்றுத்திறனாளிகளுக்கான அசல் தேசிய அடையாள அட்டையைக் கொண்டு, 40 சதவீதத்திற்கு மேல் மாற்றுத்திறன் கொண்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் துணையாளர் ஒருவருடன் சாதாரண கட்டண நகர பஸ்களில் கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதிக்க வேண்டும். அவர்கள் 2 பேருக்கும் உரிய இலவச பயணச்சீட்டை கண்டக்டர் வழங்க வேண்டும்.

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் பாகுபாடின்றி மாநிலம் முழுவதும் பஸ்களில் பயண எண்ணிக்கை உச்சவரம்பின்றி 75 சதவீத பயணக் கட்டண சலுகையில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்