அரியலூா்: மஞ்சுவிரட்டுக்கு அனுமதி தரமறுத்த தாசில்தார் மீது தாக்குதல்...!

ஜெயங்கொண்டம் அருகே மஞ்சுவிரட்டுக்கு அனுமதி தரமறுத்த தாசில்தார் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.

Update: 2022-03-17 03:15 GMT
ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சுத்துக்குளம் கிராமத்தில் பிரசித்திபெற்ற முனீஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் திருவிழா சிறப்பாக நடைபெற்று. இந்த விழாவின் போது மஞ்சு விரட்டு நடத்துவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு கோவில் திருவிழா மற்றும் மஞ்சுவிரட்டுக்காண ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர். இதில் கோவில் திருவிழாவுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டு, மஞ்சுவிரட்டு விழா நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தடையை மீறி மஞ்சுவிரட்டு விழா நடத்துவதற்காக வாடிவாசல் அமைக்கப்பட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் மக்கள் செய்திருந்தனர்.

பின்னர் இதுபற்றி தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்தன் தலைமையிலான வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் நேற்று இரவு பேச்சுவார்த்தை நடத்தி, அங்கு அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலிகளை அகற்றுமாறு கேட்டுக்கொண்டனர். இதில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து அதிகாரிகள் தரப்பில் ஜேசிபி எந்திரம் கொண்டு கம்பி வேலிகளை அகற்றினர்.

 இதில் ஆத்திரமடைந்த அக்கிராமத்தைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட கும்பல் தாசில்தார் வாகனத்தை சூழ்ந்துகொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் வாகனத்தில் உள்ளே இருந்த தாசில்தாரை வலுக்கட்டாயமாக கீழே இறக்கி, வாகனத்தின் கதவுகளை உடைத்து கொலைவெறி தாக்குதல் நடத்தினர். மேலும் அவரது வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்து தாக்கியுள்ளனர். இதில் அவர்களிடமிருந்து தப்பிக்க வழியின்றி உயிருக்கு போராடி செய்வதறியாமல் தாசில்தார் தவித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் இதுபற்றி தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. கலைக் கதிரவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தி, தாசில்தாரை பத்திரமாக மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து குண்டவெளி கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் மீன்சுருட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்