அஜித்குமார் நடித்துள்ள ‘வலிமை’ படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தடை இல்லை

அஜித்குமார் நடித்துள்ள வலிமை படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிடுவதற்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்து உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-03-23 22:09 GMT
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் ஜே.கே.கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெயகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள வழக்கில், ‘‘நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவான வலிமை திரைப்படத்தின் கதை, கதாபாத்திரங்கள், 2016-ம் ஆண்டு வெளியான ‘மெட்ரோ' என்ற திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. வசதியான வாழ்கைக்காக சங்கிலி பறிப்பது, போதைப்பொருள் கடத்தலில் தம்பிக்கு தொடர்புள்ளதை அறிந்து கொள்ளும் கதாநாயகன், தம்பியை கொல்வது போல காட்சிப்படுத்தப்பட்டது. பிற மொழிகளில் மெட்ரோ படத்தை தயாரிக்க உள்ள நிலையில், அதே அம்சங்களுடன் வலிமை படமாக்கப்பட்டது காப்புரிமை சட்டத்துக்கு எதிரானது. எனவே வலிமை படத்தை சாட்டிலைட் சேனல், ஓ.டி.டி. தளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும். ரூ.1 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார்.

தவறு

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வலிமை படத்தின் இயக்குனர் வினோத் தரப்பில் வக்கீல் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

செய்தித்தாள்களில் அன்றாடம் வரும் சங்கிலி பறிப்பு, போதைப்பொருள் கடத்தல், கொலை போன்ற செய்திகளின் அடிப்படையில் வலிமை படம் உருவாக்கப்பட்டது. கதையின் கரு, கதாப்பாத்திரங்கள், உச்ச காட்சி அனைத்தும் வெவ்வேறானவை. மெட்ரோ படத்தின் கதை, அதில் வரும் கதாபாத்திரங்களை வலிமை படத்தில் பயன்படுத்துவதாக கூறுவது தவறு. எனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த வழக்கை தொடர்ந்துள்ள மனுதாரரிடம் ரூ.10 கோடி ரூபாய் இழப்பீடு கோரி தனியாக வழக்கு தொடர உள்ளேன்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

மறுப்பு

இதையடுத்து நீதிபதி, வலிமை படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியீட்டிற்கு தடைவிதிக்க மறுத்து விட்டார். வழக்கு விசாரணையை வருகிற ஏப்ரல் 12-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

மேலும் செய்திகள்