புதிய பான்கார்டு வழங்க போவதாக கூறி அடுத்தடுத்து 4 பேரிடம் மர்மகும்பல் கைவரிசை..!

சென்னையில் மர்ம கும்பல் ஒன்று புதிய பான்கார்டு வழங்க போவதாக கூறி 2 டாக்டர்கள் உள்பட 4 பேரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.3½ லட்சம் பணம் பறித்துள்ளனர்.

Update: 2022-04-16 10:29 GMT
சென்னை:

மயிலாப்பூர் ஆதம் தெருவைச் சேர்ந்தவர் கவிதா (வயது 43). இவர் தனது கணவருடன் சேர்ந்து மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய செல்போன் எண்ணுக்கு உங்கள் பான் கார்டு காலாவதி ஆகிவிட்டது, அதனால் புதிய பான் கார்டு வழங்க இருப்பதால் உங்கள் வங்கி கணக்கு விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என குறுஞ்செய்தி வந்துள்ளது

இதை உண்மை என நம்பிய கவிதா தன்னுடைய வங்கி கணக்கு விவரங்களை பதிவிட்டார். பதிவிட்ட சிறிது நேரத்திலேயே கவிதாவின் வங்கிக் கணக்கில் இருந்து 16 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டது.

இதேபோல் குறுஞ்செய்தி அனுப்பி சென்னை ஆழ்வார்பேட்டை தனியார் மருத்துவமனை டாக்டர் ஹேமா என்பவரின் வங்கி கணக்கில் இருந்து 90 ஆயிரம் ரூபாயும், மற்றொரு டாக்டர் செந்தில் வடிவேலு வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயையும் மர்ம கும்பல் திருடி உள்ளது. இது தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ராயப்பேட்டை என்ஜினீயர் விஜய ராகவேந்திரா என்பவரின் செல்போனுக்கும் இதுபோன்ற ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதையடுத்து மர்மநபர் ஒருவர் விஜய ராகவேந்திராவை தொடர்புகொண்டு ஓ.டி.பி. எண்ணை கேட்டுள்ளார். மறுமுனையில் பேசும் நபர் வங்கி ஊழியர் என நினைத்து விஜய ராகவேந்திரா தனது கணக்கு விவரங்களை தெரிவித்துள்ளார்.

சிறிது நேரத்திலேயே ராகவேந்திராவின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.96 ஆயிரம் திருடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ராயப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்