மாணவிக்கு பாலியல் கொடுமை: சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன்

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-04-20 18:52 GMT
சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நே‌ஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் தன் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்கின்றனர். இதுதொடர்பாக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15-ந் தேதி சிவசங்கர் பாபாவை போலீசார் கைது செய்தனர்.

மொத்தம் 8 வழக்குகளில் 6 வழக்குகளுக்கு சிவசங்கர் பாபாவுக்கு விசாரணை கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் ஜாமீன் வழங்கியுள்ளது. மீதமுள்ள ஒரு வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் சிவசங்கர் பாபா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சாட்சி கலைப்பு

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் எமலியாஸ் ஆஜராகி, ‘சிவசங்கர் பாபா மீதான 8 வழக்குகளில் ஒரு வழக்கில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், புகார் கொடுத்துள்ள மாணவி 2015-ம் ஆண்டே படிப்பை முடித்தாலும், 2021-ம் ஆண்டு தொடக்கம் வரை இ-மெயில் மூலம் பேசிக்கொண்டுதான் இருந்துள்ளார். மதிப்புமிக்க ஆசிரியர்கள் மீது நம்ப முடியாத அளவுக்கு குற்றம்சாட்டியுள்ளார். சிவசங்கர் பாபா கைதான பிறகு, ஒவ்வொரு மாதமும் ஒரு வழக்கில் கைது என சி.பி.சி.ஐ.டி. போலீசார் செயல்பட்டுள்ளனர்’ என்று வாதிட்டார்.

நிபந்தனை ஜாமீன்

போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை மிரட்டுவார். தலைமறைவாகி விடுவார். சிவசங்கர் பாபா மீதான அனைத்து வழக்குகளிலும் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது’ என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதில், போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பாஸ்போர்ட்டை விசாரணை கோர்ட்டில் ஒப்படைக்கவேண்டும். போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல், தமிழ்நாட்டைவிட்டு வெளியில் செல்லக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்