திருப்பத்தூர்: ஆசிரியரை தாக்க முயன்ற பள்ளி மாணவன் சஸ்பெண்ட்...!

திருப்பத்தூர் அருகே அரசு பள்ளியில் ஆசிரியரை ஆபாசமாக திட்டி தாக்க முயன்ற மாணவன் சஸ்பெண்ட செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2022-04-21 06:30 GMT
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தாவரவியல் ஆசிரியராகப் சஞ்சய் பணியாற்றி வருகிறார். இவர் வகுப்பறையில் இருந்த மாணவர்களிடம் ரெக்கார்ட் சமர்ப்பிக்கும் படி கேட்டுள்ளார்.

இதனை சில மாணவர்கள் பொருட்படுத்தாமல் நோட்டு சமர்ப்பிக்காமல் இருந்தனர்.

இந்நிலையில் நேற்று வகுப்பறைக்கு சென்ற ஆசிரியர் சஞ்சய் ரெக்கார்டு நோட்டு சமர்ப்பிக்காத மாணவர்களை தட்டிக் கேட்டார்.

அப்போது சில மாணவர்கள் ஆசிரியரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றனர். மேலும் 2 மாணவர்கள் அவரது அருகே சென்று ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்தனர்.

மாணவர்களின் இந்த செயலால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் வகுப்பறையை விட்டு வெளியேறினார்‌. இந்த நிகழ்வு பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வேலன் மாணவர்களிடம் விசாரணை நடத்தினார்.
 
சமீபகாலமாக அரசு பள்ளிகளில் மாணவர்கள் தகாத முறையில் நடந்து கொள்வதும் ஆசிரியர்களுக்கு மிரட்டல் விடுப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இது போன்ற சம்பவங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்

இந்த நிலையில் இன்று காலை வாணியம்பாடி உதவி கலெக்டர் காயத்ரி சுப்பிரமணி மற்று ஆம்பூர் தாசில்தார் பழனி ஆகியோர் மாதனூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர் வேலனிடம் சம்பவம் தொடர்பாக கேட்டறிந்தனர். பின்னர், பள்ளி ஆசிரியரை அவதூறாக பேசி தாக்க முயன்ற மாணவர்களிடம் உதவி கலெக்டர் விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில் ஆசிரியரை தாக்க முயன்ற மாணவர்கள் பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்