கள்ளத்தனமாக டீசல் விற்பனை: கரூர் ஏட்டு பணியிடை நீக்கம்

கரூர் அருகே கள்ளத்தனமாக டீசல் விற்பனை செய்த போலீஸ் ஏட்டை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

Update: 2022-04-27 01:51 GMT
கரூர்:

கரூர் அருகே உள்ள தோரணக்கல்பட்டியில் கள்ளத்தனமாக டீசல் விற்கப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. இதன் பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் தட்சிணாமூர்த்தி, குடிமைப்பொருள் பறக்கும் படையினர் மற்றும் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். 

அப்போது பதிவு எண் இல்லாத 25 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள டேங்கர் லாரியில் இருந்து மற்றொரு லாரிக்கு சுமார் 5 ஆயிரம் லிட்டர் பயோடீசல் நிரப்பப்பட்டது தெரியவந்தது. 

விசாரணையில், அந்த லாரி கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு தமிழ்செல்வனுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதனைதொடர்ந்து 2 லாரிகளும், டீசலுடன் பறிமுதல் செய்யப்பட்டன. 

இதையடுத்து ஏட்டு தமிழ்செல்வன் உள்பட 3 பேர் மீது உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் ஏட்டு தமிழ்செல்வனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்