மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரம்: தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-01 14:57 GMT
கோவை:

கோவை, தெலுங்குபாளையத்தை அடுத்த பூசாரிபாளையம் நாயக்கர்தோட்டத்தை சேர்ந்தவர் மதிஒளி (வயது 41). பெயிண்டர். இவரது மனைவி சரஸ்வதி (40). இவர்  சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணி புரிந்தார். 

இதனிடையே மதிஒளிக்கும் அவரது மனைவி சரஸ்வதிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. சரஸ்வதி தன்னுடன் சண்டை போடுவதற்கு தனியார் மருத்துவமனை ஊழியர்கள் தான் என்று மதிஒளி கருதி உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர் அடிக்கடி அந்த மருத்துவமனையை தெலைபேசியில் தொடர்பு கொண்டு போனை எடுக்கும் ஊழியர்களுடன் உங்களால் தான் எனது மனைவி, என்னுடன் சண்டை போடுகிறார் என்று கூறி தகராறு செய்து வந்தார். 

இதனால் மனவேதனை அடைந்த சரஸ்வதி கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பே அந்த மருத்துவமனையில் இருந்து வேலையை விட்டு நின்று விட்டார். இருப்பினும் மதிஒளி அந்த மருத்துவமனைக்கு அடிக்கடி போன் செய்து ஊழியர்களிடம் சண்டை போடுவதை வாடிக்கையாக வைத்து உள்ளார்.

இந்த நிலையில் நேற்று மதிஒளி தனியார் மருத்துவமனையை தொலைபேசியை தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது போனை எடுத்து ஊழியர்களிடம் உங்களால்தான் எனது மனைவி, என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார் என்று கூறி சண்டை போட்டதுடன், மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்து உள்ளதாக அவர்களிடம் தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் மருத்துவமனை மேலாளர் நித்யானந்தத்திடம் தெரிவித்தனர். அவர் உடனடியாக சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து ஆஸ்பத்திரியில் சோதனை செய்தனர். இதில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது குறித்து புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெயிண்டர் மதிஒளியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்