கோவில் திருவிழாக்களில் ஆடல்-பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ஆபாச பேச்சு, நடனங்கள் இருக்கக்கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனையுடன் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2022-05-09 20:43 GMT
மதுரை,

தற்போது சித்திரை மாதம் என்பதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிராம கோவில்களில் திருவிழாக்கள் நடக்கின்றன. இந்த திருவிழாக்களில் ஆடல் பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

சில இடங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாலும், கொரோனா தொற்று பரவியதாலும் ஆடல்-பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா தொற்று நடைமுறைகள் தளர்த்தப்பட்ட போதும் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கவில்லை.

பல்வேறு வழக்குகள்

இதனால் கோவில் திருவிழாக்களில் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி தர கோரி மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து பல்வேறு வழக்குகள் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்து பிறப்பித்த உத்தரவில், பல்வேறு நிபந்தனைகளை விதித்து ஆடல்-பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

குறிப்பாக ஆடல்-பாடல் நிகழ்ச்சியை இரவு 8 மணிக்கு ஆரம்பித்து இரவு 11 மணிக்குள் முடித்து கொள்ள வேண்டும். ஆபாசமான வார்த்தைகள், நடனங்கள் இருக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டு வழக்குகளை முடித்து வைத்தார்.

மேலும் செய்திகள்