தீக்குளித்து இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி: மயிலாப்பூர், மந்தைவெளியில் மாற்று வீடுகள் கொடுக்கப்படும்

தீக்குளித்து இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் நிதி வழங்கவும், மயிலாப்பூர், மந்தைவெளியில் மாற்று இடங்கள் வழங்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-09 23:27 GMT
சென்னை,

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் இளங்கோ தெருவில் பக்கிங்காம் கால்வாயையொட்டி ஏராளமான வீடுகள் இருக்கிறது. இதில் 625 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, வருவாய்த்துறை சார்பில் போலீசார் உதவியுடன் அங்குள்ள வீடுகள் கடந்த வாரம் முதல் இடிக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் அந்த பகுதியை சேர்ந்த கண்ணையா என்பவர் வீடுகள் இடிக்கப்படுவதை கண்டு மனம் நொந்து தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார். இதனால் அந்த பகுதி மக்கள் கண்ணையா மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தினர்.

சட்டசபையில் எதிரொலித்தது

இந்த பிரச்சினை சட்டசபையிலும் எதிரொலித்தது. சட்டசபையில் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் இது குறித்து அரசின் கவனத்தை ஈர்த்தார். அப்போது அவர், ‘இந்த பிரச்சினைக்கு அரசு உரிய தீர்வு காணவேண்டும். உயிர் இழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்' என்றார்.

அதனை தொடர்ந்து, செல்வ பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பா.ம.க.), நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு), ஷாநவாஸ் (விடுதலை சிறுத்தைகள்), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) ஆகியோர், ‘விளிம்பு நிலையில் உள்ள மக்களை காப்பாற்ற அரசு கனிவான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தினர்.

ரூ.10 லட்சம் நிவாரண நிதி

இதற்கு வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பதில் அளித்து கூறியதாவது:-

கோர்ட்டு உத்தரவின்படி அதிகாரிகள் அங்கு சென்றார்கள். இந்த பிரச்சினை என்பது 2008-ம் ஆண்டு முதலே இருக்கிறது. இந்த வழக்கு கீழ் கோர்ட்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் தனிநபர் ஒருவர் மீண்டும் மேல் முறையீடு செய்ததால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருக்கிறது. இந்த ஆட்சி ஏழை மக்களை காக்கும் ஆட்சி.

வீடுகளை காலி செய்ய போதிய கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 366 பேருக்கு மாற்று இடம் வழங்கப்பட்டு விட்டது. ஆனால், வீடுகளில் உள்ளவர்கள் தங்களது பிள்ளைகள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படிப்பதால் கால அவகாசம் கோரினார்கள். அவர்களுக்கு எந்த சிரமமும் இல்லாமல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாற்று இடங்களை நாங்கள் உடனே வழங்கி வருகிறோம். பொதுவாக மக்கள் தங்கள் வசிக்கும் பகுதியிலே மாற்று இடம் கேட்கிறார்கள். எதிர்காலத்தில் இதுகுறித்து முதல்-அமைச்சர் பரிசீலிப்பார்.

உயிரிழந்த கண்ணையாவின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்ளும் நிலையில், அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்ச ரூபாய் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மறுகுடியமர்வு கொள்கை

இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

மயிலாப்பூரில் ஒரு விரும்பத்தகாத நிகழ்வு நடந்திருக்கிறது. உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். இனி வரக்கூடிய காலக்கட்டத்திலே இதுபோன்று ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூடிய பணியை மேற்கொள்கிற நேரத்தில், முன்கூட்டியே அந்தப் பகுதி மக்களுக்கு மறுகுடியமர்வு செய்யக்கூடிய இடம் குறித்து, அவர்களுடைய கருத்துகள் கேட்கப்படும்.

மேலும், அந்தப் பகுதி மக்கள் பிரதிநிதிகளோடு இதுகுறித்து கலந்துபேசி, ஒரு இணக்கமான சூழ்நிலையை வரக்கூடிய காலக்கட்டத்தில் நிச்சயமாக நாங்கள் ஏற்படுத்துவோம். அவர்களுக்கான புதிய இடத்தில், தேவைப்படும் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் மறுகுடியமர்வு செய்யப்படுவார்கள். இதற்காக மறு குடியமர்வு கொள்கை ஒன்று, அனைத்து மக்கள் நலன் சார்ந்த அம்சங்களைக் கொண்டு விரைவிலே அதற்குரிய விதிமுறைகளோடு வகுக்கப்படும்.

கடைசி சம்பவமாக இருக்க வேண்டும்

நீங்கள் தெரிவித்த அனைத்துக் கருத்துக்களோடு, அதைவிட கூடுதல் மனச் சுமையுடனுடம், ஆழ்ந்த துயரத்துடனும் நானும் இதிலே பங்கேற்கிறேன். இந்தச் சம்பவம் கடைசி சம்பவமாக இருக்க வேண்டுமென்பதுதான் என்னுடைய விருப்பம். இங்கே அமைச்சர் சொல்கிறபோது, அந்தப் பகுதியிலேயே, அவர்களுக்கு மறுகுடியமர்வு இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று அந்தப் பகுதி மக்கள் கருதுகிறார்கள் என்ற ஒரு நிலையை எடுத்துச் சொன்னார்கள்.

ஏற்கனவே தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின்மூலம் மந்தைவெளி, மயிலாப்பூர் பகுதிகளிலே கட்டப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய வீடுகளில், அவர்களுக்கு நிச்சயமாக வீடுகள் ஒதுக்கித்தரப்படும் என்று அரசு முடிவெடுத்திருக்கிறது என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்