தஞ்சை: அதிகாலையில் கொள்ளை முயற்சி - வீட்டுக்காரர் சத்தம்போட்டதால் கொள்ளையர்கள் தப்பியோட்டம்

தஞ்சை அருகே அதிகாலையில் வீட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர்கள் வீட்டுக்காரர் சத்தம்போட்டதால் பைக் மற்றும் ஆயுதங்களை போட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர்.

Update: 2022-05-10 09:05 GMT
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகிலுள்ள மல்லிப்பட்டினம் கடைத்தெருவில் வசித்து வருபவர் ஜெகபர் அலி, இவர் விசைப்படகு வைத்து தொழில் செய்து வருகிறார். மேலும், விசைப்படகுகளை பழுது நீக்கும் தொழிலும் செய்து வருகிறார். 

இவர் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது அதிகாலை 3 மணியளவில், 2 மர்ம நபர்கள் கதவை உடைத்து வீட்டின் உள்ளே புகுந்து திருட முயன்றுள்ளனர். அப்போது சத்தம் கேட்டு எழுந்த ஜெகபர் அலி திருடர்கள் நிற்பதைக் கண்டு கூச்சலிட்டு சத்தம்போட்டுள்ளார். 

இதையடுத்து அந்த மர்ம நபர்கள் இருவரும் தாங்கள் கொண்டு வந்த பைக் மற்றும் கத்தி, அரிவாள், கடப்பாறை, ஸ்குரு டிரைவர் மற்றும் விலை உயர்ந்த கேமரா ஆகியவற்றை அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

அதே நேரத்தில் மல்லிப்பட்டினம் வடக்குத் தெருவில் வசிக்கும் உணவகம் நடத்தி வரும் எவரெஸ்ட் அய்யூப்கான் என்பவர் வீட்டில் இருந்த பைக் திருடப்பட்டிருந்தது. எனவே, மர்ம நபர்கள் தங்கள் வந்த பைக்கை விட்டு விட்டு, அய்யூப்கானின் மோட்டார் சைக்கிளைத் திருடிக்கொண்டு தப்பி சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. 

அதிகாலையில் நடந்த இச்சம்பவத்தால் மல்லிப்பட்டினத்தில் சம்பவ இடத்தில் திரளான மக்கள் குவிந்தனர். இதையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவலறிந்த சேதுபாவாசத்திரம் காவல்துறை உதவி ஆய்வாளர் ஜெம்புலிங்கம் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி திருடர்கள் விட்டுச்சென்ற பைக், ஆயுதங்கள், கேமரா ஆகியவற்றை கைப்பற்றி சேதுபாவாசத்திரம் காவல் நிலையம் கொண்டு சென்றார். 

அய்யூப்கான் அளித்த புகாரின் பேரில் பைக் திருடு போனது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளை முயற்சி குறித்து ஜெகபர்அலியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்