அயன் பட பாணியில் கடத்தல் - சிக்கியது 4 கோடி மதிப்பிலான போதைபொருள்

கோவைக்கு வந்த உகாண்டா நாட்டு பெண்ணின் வயிற்றில் இருந்து கேப்சூல் கைப்பற்றிய நிலையில் அவரது வயிற்றில் இருந்தது மெத்ராபெத்தமின் எனும் போதைப்பொருள் என தெரியவந்துள்ளது.

Update: 2022-05-10 09:46 GMT
கோவை:

கோவைக்கு கடந்த 6-ம் தேதி ஷார்ஜாவில் இருந்து வந்த ஏர் அரேபியா விமானத்தில் வரும் பெண் ஒருவர் போதைப்பொருளை கடத்தி வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.

விமானம் கோவைக்கு வந்ததும் பயணிகளை அதிகாரிகள் கண்காணித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது உகாண்டா நாட்டிலிருந்து வந்த பெண் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனையடுத்து அதிகாரிகள் அவரை தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கேப்சூல் வடிவில் போதைப்பொருளை வயிற்றுக்குள் விழுங்கி கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அதிகாரிகள் அவர் கடத்தி வந்த பொருளை வெளியே எடுப்பதற்காகவும், என்ன பொருளை கடத்தி வந்தார் என்பதை தெரிந்து கொள்ளவும் அந்த பெண்ணை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் உகாண்டா நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரூ என்பவரது மனைவி சேன்ட்ரா நன்டசா (வயது 33) என்பது தெரியவந்தது. சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவரது வயிற்றிலிருந்து 2 நாட்களில் 81 மாத்திரைகள் வெளியே வந்தது.

அதனை அதிகாரிகள் என்ன போதைப்பொருள் என்பதை கண்டறிய ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். ஆய்வின் முடிவில் உகாண்டா நாட்டு பெண் கடத்தி வந்தது மெத்ராபெத்தமின் என்ற போதைப் பொருள் என்பது தெரியவந்தது.

இந்த போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.4 கோடி என்பதும் தெரியவந்தது. இந்தப் பெண்ணை அதிகாரிகள் இன்று தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் ஜெயில் அடைப்பதற்கான பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்