அரசு வேலைக்கான வயது வரம்பில் 3 ஆண்டுகள் தளர்வு

அரசு வேலைவாய்ப்புக்கு வயது வரம்பில் 3 ஆண்டு தளர்வு அளிக்கவேண்டும் என்று கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.

Update: 2022-05-11 16:37 GMT
அரசு வேலைவாய்ப்புக்கு வயது வரம்பில் 3 ஆண்டு தளர்வு அளிக்கவேண்டும் என்று கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஏமாற்றும் செயல்
புதுவை மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் பணிமூப்பு காரணமாக காலியானது. காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி அரசு காலி பணியிடங்களை நிரப்பாமல் படித்த இளைஞர்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி செய்தார்.
5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துவிட்டு தற்போது ஆளும் அரசு ஏன் காலியிடங்களை நிரப்பவில்லை என்று தி.மு.க.வும், காங்கிரசும் கூப்பாடு போடுவது தவறான ஒன்றாகும். தற்போது வயது தளர்வினை மறுபரிசீலனை செய்யக்கோருவது ஒரு ஏமாற்று செயலாகும்.
பணி விதியில் திருத்தம்
தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் மருத்துவம், காவலர் உள்ளிட்ட காலி பணியிடங்கள் ஒவ்வொன்றாக நிரப்பப்பட்டு வருகிறது. இன்னும் சில நாட்களில் இளநிலை, மேல்நிலை எழுத்தர் தேர்வுகள் நடைபெறும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தி.மு.க. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வயது வரம்பில் 10 ஆண்டுகள் தளர்வு கேட்டு வீண் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.
அரசு வேலை, பணி விதியில் உரிய திருத்தம் கொண்டுவராமல் வயது விஷயத்தில் எந்தவித மாற்றமும் கொண்டுவர முடியாது. மாற்றங்கள் கொண்டுவர அதற்கான நியாயமான காரணங்களை தெரிவித்து திருத்தம் கொண்டுவர வேண்டும்.
3 ஆண்டு தளர்வு
கடந்த கால அரசின் தவறுக்கு வயது உச்ச வரம்பு நீட்டிப்பு என்பது தவறான ஒன்றாகும். அதனால் பாதிக்கப்படும் இளைஞர்கள் நீதிமன்றம் சென்றால் பணிநியமனம் தடை ஏற்படும். உண்மை நிலை இவ்வாறு இருக்க தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களோடு தற்போதைய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களும் சேர்ந்துகொண்டு கோரிக்கை வைப்பது குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும். 
3 ஆண்டு கொரோனா காலத்தை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு அதற்காக வயது வரம்பை நீட்டிப்பு செய்து இதுசம்பந்தமாக சட்ட நிபுணர்களின் கருத்தை கேட்டு உரிய அறிவிப்பை முதல்-அமைச்சர் வெளியிட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அன்பழகன் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்