தமிழகம் உள்பட 40 இடங்களில் சி.பி.ஐ. போலீசார் அதிரடி சோதனை

வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் நன்கொடை பெற்று முறைகேட்டில் ஈடுபட்ட புகாரில் தமிழகம் உள்ளிட்ட 40 இடங்களில் சி.பி.ஐ. போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் 6 பேர் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-05-12 21:09 GMT
சென்னை,

வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் நன்கொடை பெற்று முறைகேட்டில் ஈடுபடுவதாக சி.பி.ஐ. போலீசாருக்கு நிறைய புகார்கள் வந்தன. சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும் புகார்களில் குற்றம் சுமத்தப்பட்டது.

மத்திய அரசு அதிகாரிகள் சிலர் இந்த முறைகேடுகளுக்கு துணை போவதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. போலீசார் ரகசிய விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியானது.

மேலும் இந்த முறைகேடுகளுக்கு துணை போகும் மத்திய அரசு அதிகாரிகளுக்கு ஹவாலா பரிவர்த்தனை மூலம் லஞ்சப்பணம் வினியோகிக்கப்படுவதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து டெல்லி சி.பி.ஐ. போலீசார் நேற்று முன்தினம் 36 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். ரூ.4 லட்சம் லஞ்சப்பணம் பரிமாற்றம் நடந்தபோது டெல்லியில் 2 பேர் பிடிபட்டனர். அவர்களில் ஒருவர் சென்னை ஆவடியைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்.

40 இடங்களில் சோதனை

இதையொட்டி நேற்று முன்தினம் தமிழகம் உள்பட டெல்லி, அரியானா, இமாசலபிரதேசம், ஜார்கண்ட், ராஜஸ்தான், தெலுங்கானா, ஆந்திரா, அசாம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் 40 இடங்களில் சி.பி.ஐ. போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். தமிழகத்தில் சென்னை, கோவை போன்ற இடங்களில் இந்த சோதனை நடந்தது.

இந்த சோதனையின் போது, ரூ.3.21 கோடி ரொக்கப்பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

14 பேர் கைது

இந்த சோதனையை தொடர்ந்து டெல்லி மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் 6 பேர் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் ஹவாலா தரகர் ஒருவரும், வேலூர் மாவட்டத்தில் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் ஒருவரும், கோவையில் ஆடிட்டர் ஒருவரும் கைதானவர்கள் பட்டியலில் உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

மேலும் செய்திகள்