மத்திய அரசை கண்டித்து தபால் நிலையத்தை முற்றுகையிட முயற்சி; இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 28 பேர் கைது

ஊட்டியில், மத்திய அரசை கண்டித்து தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 28 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-09-13 00:15 IST


ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரை படத்தில் காணலாம்.


ஊட்டி: ஊட்டியில், மத்திய அரசை கண்டித்து தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 28 பேர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசை கண்டித்து

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு உள்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஊட்டியில் தபால் நிலையத்தை முற்றுகையிட முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி ஊட்டி ஏ.டி.சி. பகுதியில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு மாவட்ட செயலாளர் போஜராஜன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு வந்த பிறகு பெட்ரோல் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து உள்ளது. பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்பு, பண வசூலை மட்டும் குறியாக கொண்டு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியால் சிறு குறு நடுத்தர தொழில்கள் பாதிப்படைந்து உள்ளன. மேலும் ரெயில்வே, பொதுத்துறை நிறுவனங்களில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. இதை நிரப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிரந்தர தொழிலாளர் முறை கைவிடப்பட்டு ஒப்பந்த முறையில் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

இதனால் சம்பளம், பணி நிரந்தரம், சமூக பாதுகாப்பு இல்லாமல் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. தமிழகத்தில் ஜவுளி பின்னலாடை, ஆயத்த ஆடை பம்பு செட் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வந்த பெரும்பாலான நிறுவனங்கள் பாதிப்படைந்துள்ளதால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக செயல்படும் பா.ஜனதா ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

28 பேர் கைது

இதைத்தொடர்ந்து அவர்கள், தபால் நிலையம் நோக்கி சென்று முற்றுகையிட முயன்றனர். இதனை அறிந்த ஊட்டி மத்திய போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 6 பெண்கள் உள்பட 28 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை ஒரு மண்டபத்தில் தங்கவைத்து மாலை விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்