2-வது நாளாக தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு 2-வது நாளாக தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-06-24 21:32 GMT

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு 2-வது நாளாக தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர் போராட்டம்

ஈரோடு மாநகராட்சி பகுதியில் தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் விடுவதை கைவிட வேண்டும். அதற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும். 480 நாட்கள் பணியாற்றிய தினக்கூலி பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ.725 ஏப்ரல் மாதம் முதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எல்.பி.எப். உள்ளிட்ட தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றன.

மேலும் 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் தீர்வு காணப்படவில்லை. இதனால் தூய்மை பணியாளர்கள் நேற்று முன்தினம் முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் அவர்கள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் நேற்று 2-வது நாளாக தொடர்ந்தது. இதில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மலைபோல் குவிந்த குப்பைகள்

இந்த போராட்டம் காரணமாக மாநகராட்சி பகுதியில் பெரும்பாலான இடங்களில் கடந்த 2 நாட்களாக குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன. குறிப்பாக பெரியசேமூர், தென்றல் நகர், பெரியவலசு, சூரம்பட்டி, கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம், எல்.வி.ஆர். காலனி, சூளை, பெரியார் நகர், ஆலமரத்து வீதி உள்பட பல்வேறு இடங்களில் குப்பைகள் ரோட்டோரத்தில் கொட்டப்பட்டு இருந்தன.

இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சியில் நாளொன்றுக்கு 250 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தூய்மை பணியாளர்களின் 2 நாள் போராட்டம் காரணமாக குப்பைகள் தேங்கியுள்ளன. இதற்கிடையில் நிரந்தர பணியாளர்கள் சிலரை வைத்து குப்பைகள் சேகரித்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்