பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை

எருமப்பட்டி அருகே வீடு புகுந்து பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்தவருக்கு சேந்தமங்கலம் கோர்ட்டில் நேற்று 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2023-10-07 18:45 GMT

சேந்தமங்கலம்

வீட்டில் திருட்டு

எருமப்பட்டி அருகே உள்ள செவிந்திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமேகலை (வயது 30). இவர் கடந்த 2016-ம் ஆண்டு தனது வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்மநபர் ஒருவர் அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துகொண்டு ஓடிவிட்டார். அந்த சம்பவம் குறித்து மணிமேகலை எருமப்பட்டி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர்.

இந்தநிலையில் அந்த செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர் தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (35) என்று தெரியவந்தது. அதைதொடர்ந்து அவரையும், திருட்டுக்கு உறுதுணையாக இருந்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் 4 பேருக்கு அந்த வருடத்திலேயே நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 6 மாத சிறை தண்டனைக்கு போலீசார் ஏற்பாடு செய்தனர்.

3 ஆண்டு சிறை

இந்தநிலையில் மணிகண்டன், அவருடைய நண்பர் சவுந்தர் ஆகிய இருவரும் தலைமறைவாக இருந்தனர். அதைத்தொடர்ந்து மணிகண்டனை கைது செய்த எருமப்பட்டி போலீசார், சேந்தமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹரிகரன் மணிகண்டனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு அளித்தார். மேலும் தலைமறைவான சவுந்தரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்