மரத்தில் பஸ் மோதி 30 மாணவ- மாணவிகள் படுகாயம்

திருப்பத்தூர் அருகே அரசு பஸ் மரத்தில் மோதி 30 பள்ளி மாணவ- மாணவிகள் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல்தெரிவித்தும் அதிகாரிகள் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-24 18:20 GMT

திருப்பத்தூர் அருகே அரசு பஸ் மரத்தில் மோதி 30 பள்ளி மாணவ- மாணவிகள் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல்தெரிவித்தும் அதிகாரிகள் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மரத்தில்பஸ் மோதி மாணவ- மாணவிகள் காயம்

திருப்பத்தூரை அடுத்த நாராயணபுரம் பகுதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் வடுகம்முத்தம்பட்டி அரசு பள்ளியில் படித்து வருகிறார்கள். இவர்கள் திருப்பத்தூரில் இருந்து குரிசிலாப்பட்டு அருகே உள்ள மயில்பாறை வரை இயக்கப்படும் அரசு டவுன் பஸ்சில் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். நேற்று வழக்கம் போல காலை 8 மணிக்கு நாராயணபுரத்தில் இருந்து பள்ளி மாணவ- மாணவிகள் பஸ்சில் பள்ளிக்கு சென்றுள்ளனர்.

திருப்பத்தூர்- ஆலங்காயம் மெயின் ரோட்டில் நாராயணபுரம் அருகே சென்றபோது அங்கிருந்த மரத்தில் பஸ் மோதியது. இதில் பஸ்சில் இருந்த 30 மாணவ -மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.

இதனால் அவர்கள் கூச்சலிட்டனர். அவர்களின் அழுகுரல் மற்றும் கூச்சலை கேட்டு பொதுமக்கள் சென்று பஸ்சில் இருந்து மாணவ- மாணவிகளை மீட்டனர்.

சாலை மறியல்

அவர்களுக்கு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அருகில் உள்ள குருசிலாபட்டு போலீஸ் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். தகவல் கொடுத்து 2 மணி நேரம் ஆகியும் போலீசார் மற்றும் எந்த அதிகாரியும் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் திருப்பத்தூர்- ஆலங்காயம் சாலையில் கொட்டும் மழையில் மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த விபத்து குறித்து குரிசிலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்