மேட்டூர் அணையில் இருந்து 38 டி.எம்.சி. தண்ணீர் உபரியாக வெளியேற்றம்

மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது.

Update: 2022-07-19 19:41 GMT

மேட்டூர்:-

கர்நாடக மாநிலத்தில் பருவ மழை தீவிரம் அடைந்ததன் காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி உபரிநீர், காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர்வரத்து காரணமாக கடந்த 16-ந் தேதி காலை 10 மணிக்கு மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. இதைத்தொடர்ந்து அணையில் இருந்து உபரிநீர் 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களாக 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலை முதல் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. குறிப்பாக நேற்று காலையில் நீர்வரத்து வினாடிக்கு 97 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

இதன் காரணமாக 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் திறப்பது குறைக்கப்பட்டது. அதாவது நேற்று மதியம் நிலவரப்படி 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 64 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையை ஒட்டி அமைந்துள்ள நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலையில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 87 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

கடந்த 12-ந் தேதி முதல் நேற்று காலை வரை மேட்டூர் அணைக்கு 76 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி ஆகும்). அணை தற்போது நிரம்பிய நிலையில், 38 டி.எம்.சி. தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்